மும்பை:

கடந்த சில வாரங்களாக வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பல பகுதிகளில் ரொக்கத்திற்கு பற்றாகுறை ஏற்பட்டுள்ளது.

2 ஆயிரம் ரூபாய் நோட்டு புழக்கத்தில் பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்திருப்பதாக ஏ.டி.எம் சேவை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன என்று எக்கனாமிக்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தில் திட்டமிட்ட யுக்தியாக உயர்மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களுக்கு பற்றாகுறையை ரிசர்வ் வங்கி ஏற்படுத்தி வருகிறது.

எஸ்.பி.ஐ தலைமை செயல் அதிகாரி நீரஜ் வையாஸ் கூறுகையில்,‘‘தற்போது ரிசர்வ் வங்கியில் இருந்து 500 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே அதிகம் வருகிறது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் மறுசுழற்சி மூலமே வங்கிகளுக்கு வருகிறது’’ என்றார்.

இதன் மூலம் நாட்டில் புழக்கத்தில் உள்ள மொத்த உயர்மதிப்பு ரூபாய் நோட்டுக்கு சோதனை வைக்கும் முறையை ரிசர்வ் வங்கி கையாளுவதாக வங்கியாளர்கள் தெரிவித்துள்ளனர். வங்கிகளில் 500 ரூபாய் நோட்டுக்கள் தேவையான அளவு கிடைக்கிறது. இது வாடிக்கையாளர்கள் பயன்பாட்டிற்கு எளிதாக உள்ளது என்று வர்த்தகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த நவம்பரில் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட பிறகு அவசரஅவசரமாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி அச்சடித்து வெளியிட்டது. முன்பிருந்த மொத்த அளவு ரூபாய் நோட்டுக்களுக்கு இணையாக ரிசர்வ் வங்கியால் அச்சடிக்க முடியாமல் போனது.

தற்போது 500 ரூபாய் நோட்டுக்கள் அதிகளவில் அச்சடிக்கப்படுகிறது. அதேபோல் 200 ரூபாய் நோட்டுக்களும் புதிதாக அச்சடிக்கும் பணி நடந்த வருவதாக வங்கியாளர்கள் தெரிவித்துள்ளனர்.