சென்னை,

கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற சென்னை மதுரவாயல் ஆய்வாளர் பெரிய பாண்டி, அங்கு கொள்யைர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ராஜஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட காவல்ஆய்வாளர் உடல் இன்று மதியம் சென்னை வருகிறது. காலை 8.40 மணி அளவில் ராஜஸ்தானில் இருந்து தனி விமானம் மூலம் கொண்டு வரப்படும் அவரது உடல் இன்று மதியம் 12.30 மணி அளவில் சென்னை விமான நிலையம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவரது உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட  அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்  அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு இன்று இரவு இறுதி சடங்கு நடைபெறும் என கூறப்படுகிறது.

பெரியபாண்டி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவரது குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் அவரது மகனின் படிப்பு செலவை அரசே ஏற்கும் என்றும் கூறி உள்ளார்.

மேலும், சென்னை ஆவடியில் உள்ள பெரியபாண்டியனின் குடும்பத்தினருக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், காவல் ஆணையர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் நேரில் ஆறுதல் தெரிவித்தனர்.

இன்று சென்னை வரும் அவரது உடலுக்கு, விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்த இருப்பதாகக் கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து காவல்துறையினர், அரசு அதிகாரிகள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதையடுத்து,  பெரியபாண்டியன் உடல் மதுரை வழியாக, சங்கரன்கோவில் அருகே உள்ள அவரது சொந்த கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

முன்னதாக, சென்னையில் இருந்து பெரியபாண்டியனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நேற்று தனி வாகனங்கள் மூலம் நெல்லைக்கு புறப்பட்டு சென்றனர். நெருங்கிய உறவினர்கள் மட்டும் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இன்று மாலை பெரியபாண்டி உடலுக்கு இறுதிச் சடங்குகள் அவரது சொந்த ஊரான சாலைப்புதூரில்  நடைபெறும் என கூறப்படுகிறது.