சென்னை: தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என  முதல்வரிடம் திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

மத்தியஅரசு ஏற்கனவே அறிவித்துள்ள 5வது கட்ட தளர்வுகளின்படி,  அக்டோபர் 15ந்தேதி முதல்  நாடு முழுவதும் பள்ளிகள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் திறக்கப் பட்டுள்ளன. திரையரங்குகள், மல்ட்டிபிளெக்சுகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள் ஆகியவை அக்டோபர் 15ந்தேதி முதல் திறக்கலாம் என்றும், இது தொடர்பாக மாநில அரசுகள் முடிவு செய்துகொள்ளலாம் என்று அறிவித்ததுடன்,  முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்பட வழிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில், பள்ளிகள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள்  திறக்க  மாநிலஅரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை.  இதுகுறித்து கூறிய தமிழகஅமைச்சர் கடம்பூர் ராஜூவும், திரையரங்குகள் திறப்பது தொடர்பாக விரைவில் தமிழகஅரசு அறிவிக்கும் என கூறியிருந்தார்.

இந்த நிலையில்,  தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க நடவடிக்கை எடுக்க கோரி தமிழக முதல்வரிடம் மனு கொடுத்துள்ளனர்.   சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திரையரங்குஉரிமையாளர்கள் சங்க தலைவர்  அபிராமி ராமநாதன், ரோகிணி பன்னீர்செல்வம் தலைமையில் தியேட்டர் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் இன்று சந்தித்து  முதல்வரின்  தாயாரின் மறைவுக்கு  ஆறுதல் கூறினர். அதையடுத்து மனு கொடுத்தனர். அப்போது,  ஆயுதபூஜைக்கே (அக்டோபர் 25 வரும் ஞாயிற்றுக்கிழமை) தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கடந்த மார்ச் 25-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன்பின் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்ட மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்தது. தற்பொழுது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில்,  மத்திய அரசு, தளர்வுகளுடனான ஊரடங்கை அக்டோபர் 31 -ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.இதில் அக்டோபர் 15-ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.அதன்படி நாடு முழுவதும் பல இடங்களில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன.ஆனால் தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க  இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.