புதுடெல்லி: நீதிமன்ற ஆவணங்களைப் பெற வேண்டுமெனில், நீதிமன்ற விதிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிப்பதன் மூலமே அதைப் பெற முடியும் என்றும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கோர முடியாது என்றும் தனது தீர்ப்பில் கூறியுள்ளது உச்சநீதிமன்றம்.

அதன்மூலம், குஜராத் மாநில உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிசெய்துள்ளது உச்சநீதிமன்றம்.

நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ எஸ் போபன்னா மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

தேசிய தலைமை தகவல் ஆணையம் மற்றும் குஜராத் மாநில தகவல் ஆணையம் ஆகியவை, குஜராத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து செய்த மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி, நீதிமன்ற ஆவணங்கள் தவறான உபயோகத்திற்கு உள்ளாவதை அனுமதிக்க முடியாது என்றுள்ளது உச்சநீதிமன்றம்.

நீதிமன்ற ஆவணங்களைப் பெற வேண்டுமெனில், நீதிமன்ற விதிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பம் செய்வதன் மூலமே சாத்தியம் என்றும், ஆர்டிஐ சட்டத்தின் மூலம் பெற முடியாது என்றும் குஜராத் உயர்நீதிமன்றம் முன்னர் தீர்ப்பளித்திருந்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்துதான் தேசிய தகவல் தலைமை ஆணையம் மற்றும் குஜராத் மாநில தகவல் ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.