சென்னை,

மிழகத்தில் நீட் தேர்வில் இருந்து இந்த ஆண்டு  விலக்கு அளிக்கப்படும் என்று கூறிய மத்திய அரசு கடைசி நேரத்தில், விலக்கு அளிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் பல்டி அடித்தது. அதைத்தொடர்ந்து உச்ச நீதி மன்ற உத்தரவுபடி தமிழகத்தில் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

இந்த கலந்தாய்வில் வெளி மாநிலத்தை மாணவர்கள் பலர் விதிகளை மீறி,   போலி இருப்பிட சான்றிதழ் மூலம் பங்கேற்றுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது. சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் போலி இருப்பிட சான்றிதழ் மூலம் பங்கேற்றுள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக  மருத்துவ கலந்தாய்வில் பங்கு பெற்று தமிழக மருத்துவ கல்லூரியில் இடம்பிடித்த மாணவனுக்கு சம்மன் அனுப்பியும் விசாரணை செய்யப்பட்டது. இதுகுறித்த, ஆதாரங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

தமிழக அரசை திட்டமிட்டே மத்தியஅரசு வஞ்சிப்பதாக கூறப்பட்டது. இதுகுறித்து விளக்கம் அளித்த தமிழக அரசின் சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், ‘போலி இருப்பிடச் சான்றிதழ் அளிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அறிவித்திருந்தார்.

இதுகுறித்து வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் மூலம், தமிழக்ததில் நடைபெற்றுள்ள மருத்துவ கலந்தாய்வு முறைகேடுகள்  வெளிச்சத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் நீரஜ் குமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு  வழக்கு தொடுத்துள்ளார்.

இந்த வழக்கின் மூலம் தமிழகத்தில் உள்ள  மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் போலி இருப்பிடச் சான்றிதழ் கொடுத்து,  வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் 440 பேர் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள அதிர்ச்சி  தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில், மருத்துவக் கல்லூரியில் போலி இருப்பிடச் சான்றுகள் மூலம் இடம்பெற்ற மாணவர்களை உடனடியாக  மருத்துவப் படிப்பிலிருந்து நீக்க வேண்டும்” என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து ம.தி.மு.க பொதுச்செய லாளர் வைகோ  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

”சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த நீரஜ்குமார் எனும் மாணவர், தனக்குத் திருச்சியிலிருந்து சென்னை அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாறுதல் வேண்டும் என்று கேட்டு தாக்கல் செய்த மனுவில், சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் 104 வெளிமாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இடம் அளிக்கப்பட்டு உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகம் மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 440 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டிருக்கிறது.

போலி இருப்பிடச் சான்றிதழ் மற்றும் இரட்டை இருப்பிடச் சான்றிதழ் கொடுத்து மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநில மாணவர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக தொடரப்பட்டுள்ள வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம், நவம்பர் 6-ம் தேதி மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைத் தேர்வுக் குழுச் செயலாளர், மருத்துவ மாணவர் சேர்க்கைப் பற்றிய ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

தற்போது அதிர்ச்சி தரத்தக்க அளவில் மாணவர் சேர்க்கையில் போலி இருப்பிடச் சான்றிதழ் அளித்து வெளிமாநில மாணவர்கள் 440 பேர் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளது எப்படி?

இதன் பின்னணியில் நடந்துள்ள ஊழல், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் மூலம் வெளிச்சத்துக்கு வரும். மருத்துவக் கல்லூரியில் போலி இருப்பிடச் சான்றுகள் மூலம் இடம்பெற்ற மாணவர்களைக் கண்டறிந்து உடனடியாக அவர்களை நீக்கவேண்டும்.

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை ஊழலில் தொடர்புடையவர்கள் அனைவரையும் பணி இடைநீக்கம் செய்து, முழுமையான விசாரணை நடத்த வேண்டும்”.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இந்த முறைகேடு குறித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர்  வேல்முருகன் கூறியதாவது,

“சமூக நீதிக்கு எதிரான நீட் தகுதித்தேர்வை ஒட்டுமொத்தத் தமிழகமும் எதிர்த்தது. சட்டமன்றத்திலும் தீர்மானம் போட்டு டெல்லிக்கு அனுப்பினர். ஆனால்,  அதை பி.ஜே.பி. அரசு ஏற்கவில்லை.

‘இந்த ஆண்டு நீட் தேர்விலிருந்து விலக்கு தருவோம்’ என்று நம்பிக்கை வார்த்தைகளை மத்திய அமைச்சர்கள் கூறிய நிலையில், அதற்கான ஒரு புதிய சட்டத்தையும் தமிழக அரசு சார்பில் தயார் செய்தனர்.

ஆனால், நம்பிக்கை துரோகம் செய்த மத்திய அரசு, நீட் தேர்வை அமல்படுத்தி தமிழகத்திற்கு துரோகம் செய்துவிட்டது. இதனால் பாதிக்கப்பட்ட தங்கை அனிதா தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டார்.

இன்னும் எத்தனையோ ஏழை, எளிய கிராமப்புற மாணவர்கள் 12-ம் வகுப்பில் ஆயிரத்து 100-க்கும் மேல் மதிப்பெண் பெற்றபோதிலும், மருத்துவப் படிப்பில் சேர முடியாமல், மருத்துவராகும் கனவை நிறைவேற்ற முடியாத வேதனையில் உள்ளனர்.

ஆனால், 400-க்கும் மேற்பட்ட வெளிமாநிலத்தினர் தமிழகத்தில் வசிப்பதாக போலியான இருப்பிடச் சான்றிதழ்களை அளித்து, மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.  இதற்கு வருவாய்த் துறையினரும், மருத்துவக்கல்வித் துறையினரும் உடந்தையாக இருந்துள்ளனர்.

இவர்களின் துணையில்லாமல் இந்த முறைகேடு நடந்திருக்குமா? இந்த முறைகேடு தமிழக அரசுக்கே சவால் விடுவது போன்று உள்ளது.

இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்” என்றார்.