கையை உடைத்த உதவி ஆய்வாளர்!  இளைஞரின் வீடு தேடிப்போய் ஆறுதல் சொன்ன ஆணையர்!

சென்னையில் காவல்துறை உதவி ஆய்வாளரால் தாக்கப்பட்ட இளைஞரின்  வீட்டுக்கே சென்று சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆறுதல் தெரிவித்தார்.

சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஆரூண் சேட். கல்லூரி மாணவனான இவர் கடந்த 19-ம் தேதி இரவு, நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிறகு, தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ஈகா திரையரங்கம் அருகே  அவர் சென்றபோது சேத்துப்பட்டு காவல்நிலைய உதவி ஆய்வாளர் இளையராஜா முகமது ஆரூண் சேட் சென்ற இருசக்கர வாகனத்தை மடக்கி ஆவணங்களை கேட்டார்.  முகமது ஆரூணும் ஆவணங்களின் நகலை காண்பித்தார்.  ஆனால் உதவி ஆய்வாளர் அசல் ஆவணத்தை கேட்டுள்ளார்.

இதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஒருகட்டத்தில் முகமது ஆரூணை லத்தியால் சரமாரியாக தாக்கிய உதவி ஆய்வாளர் கையையும் உடைத்துள்ளார்.

இது குறித்து காவல்துறை மேலிடத்துக்கு புகார் அளிக்கப்பட்டது. சம்பவம் குறித்து விசாரித்த சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், உதவி ஆய்வாளர் இளையராஜாவை பணியிடை நீக்கம் செய்தார்.

அதோடு, உதவி ஆய்வாளரால் தாக்கப்பட்டு  காயமடைந்த முகமது ஆரூண் சேட்டின் வீட்டுக்கே சென்று அவருக்கு ஆறுதலும் கூறியுள்ளார்.

இது குறித்து காவல்துறையினர், “கொள்ளையர்கள் மற்றும் இதர குற்றவாளிகளை  துணிந்து பிடித்து  கைது செய்யும் காவலர்களை உடனடியாக அழைத்து பாராட்டுவது ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனின் வழக்கம். அதே போல தவறு செய்தாலும் உடனடியாக தண்டிக்கிறார். அது போலவே, பாதிக்கப்பட்ட இளைஞரின் வீடு தேடிப்போய் ஆறுதல் கூறியிருக்கிறார். இது சம்பந்தப்பட்ட இளைஞருக்கு காவல்துறை என்றாலே ஒருவித பயமும் வெறுப்பும் இருப்பதை போக்கும்” என்று பாராட்டுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.