அப்பாக்கள் ஜொலித்த அளவுக்கு அருண் விஜய், சிபிராஜ், கவுதம் கார்த்திக், விக்ரம் பிரபு, அதர்வா ஆகிய வாரிசு நடிகர்கள் சினிமாவில் பேர் வாங்கவில்லை.

அரை டஜன் படங்களில் நடித்தும் சிபிராஜின் மார்க்கெட் ஏறுமுகமாக இல்லாத நிலையில் அவர் திடிரென நாடகத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார்.

பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து போர் செய்த தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் நாடகம், அவர் பெயரிலேயே இசை நாடகமாக அரங்கேற உள்ளது.

இந்த நாடகத்தில் சிபிராஜ், தீரன் சின்னமலையாக நடிக்கிறார். இபான் ஸ்ரீராம் என்பவர் இதனை இயக்குகிறார். இவர் ஏற்கனவே ராணி வேலு நாச்சியார் வரலாற்றை நாடகமாக பதிவு செய்தவர்.

சினிமா படம் எடுப்பது குறித்து பேசுவதற்காகத்தான் அவர் சிபிராஜை சந்தித்துள்ளார்.

அப்போது ஸ்ரீராம், தனது தீரன் சின்னமலை நாடக கதையை சொல்ல, அதில் ஈர்க்கப்பட்ட சிபிராஜ் அந்த நாடகத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

“எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், சிவகுமார் போன்றோர் நாடகத்தில் இருந்து வந்தவர்கள். நாடகம் ஒரு நடிகரின் திறமையை இன்னமும் வளர்க்கும். இதனால் நாடகத்தில் நடிப்பதில் பெருமை கொள்கிறேன்” என்கிறார், சிபி.

– பா. பாரதி