செங்டு, சீனா

சிச்சுவான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான ஜன்னல் உடைந்து தூக்கி எறியப்பட்ட துணை விமான உயிர் தப்பி உள்ளார்.

சீனாவின் விமான நிறுவனமான சிச்சுவான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று நடுவானில் திபெத் பகுதிக்கு மேல் 30000 அடி உயரத்தில் பறந்துக் கொண்டிருந்தது.   அந்த விமானத்தை கேப்டன் லீயு சுவஞ்ஜியான் தலைமையில் உள்ள விமானிகள் செலுத்டிக் கொண்டிருந்தனர்.    விமானத்தில் 119 பயணிகள் பயணம் செய்துக் கொண்டிருந்தனர்.  அந்தப் பயணிகளுக்கு விமான பணியாளர்கள் உணவு வழங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென விமானியின் அறையில் இருந்த முன்புற ஜன்னல் உடைந்து சிதறியது.    அந்த வேகத்தில் துணை விமானி ஒருவர் வெளியே தூக்கி எறியப்பட்டார்.    அவர் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் வெளியே விழாமல் தப்பினார்.    கை எலும்பு முறிவு மற்றும் சிறு சிறாய்ப்பு காயங்கள் மட்டுமே ஏற்பட்டது.   விமானத்தினுள் காற்று அழுத்தக் குறைவு ஏற்பட்டது.  மேலும் சீதோஷ்ண நிலை உறை நிலைக்கு கீழ் 30 முதல் 40 டிகிரி இருந்தது.

விமானத்தின் உள்ளிருந்த பணியாளர்கள் சிலர் தூக்கி எறியப்பட்டு விமானத்தின் உள்ளேயே விழுந்தனர்.    அத்துடன் உணவுப் பொருட்களும் சிதறி விழுந்தன.   பெரும் சத்தம் உண்டானதால் பயணிகள் அதிர்ந்து போய் கூக்குரல் இட்டனர்.   விமானப் பணியாளர்கள் அவர்களை மிகவும் கஷ்டப்பட்டு சமாதானம் செய்தனர்.  கேப்டன் லீயு சுவஞ்ஜியான் சாமர்த்தியமாக அந்த விமானத்தை செங்டு நகரில் தரை இறக்கினார்.   யாருக்கும் எந்த சேதமும் இல்லாமல் உயிர் பிழைத்தனர்.

இது குறித்து விமான நிறுவனம் விசாரணை நடத்தி வருகிறது.  விமான பயணிகளும் சீன மக்களும் சாமர்த்தியமாக செயல்பட்ட விமானிக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர்.