மோடி நோயுற்ற மனநிலையில் இருக்கிறார்! :காங்கிரஸ் அனந்த் சர்மா தாக்கு

பிரதமர் மோடி நோயுற்ற மனநிலையில் இருக்கிறார் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அனந்த் சர்மா கூறியுள்ளார்.

இரண்டு நாட்கள் பயணமாக உத்தரப் பிரதேசம் சென்றிருந்த பிரதமர் மோடி மக்களிடையே உரையாடினார். அப்போது, முத்தலாக் மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் இருக்கிறது, காங்கிரஸ் முஸ்லிம்களுக்கான கட்சி என ராகுல் கூறுவதாக மோடி குறிப்பிட்டார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அனந்த் சர்மா நேற்று (ஜூலை 15) பிரதமரின் மனநிலை நோயுற்ற நிலையில் இருப்பதாக கடுமையாக சாடியிருக்கிறார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பிரதமராக இருக்கும் ஒருவரின் மனநிலை நோயுற்று இருப்பது தேசத்துக்குச் சிக்கலை உருவாக்கும். வரலாற்றையும், உண்மைகளையும் தவறாகச் சித்திரித்து பிரதமர் மோடி தொடர்ந்து பேசி வருகிறார். அவரது பேச்சு வரலாற்றை மட்டுமின்றி இந்தியாவின் சாதனைகளையும் குறைத்து மதிப்பிடும் வகையில் இருக்கிறது.

மோடி நாடு முழுவதுக்கும் பிரதமர் என்பதை மறந்துவிட்டு, பாஜகவுக்கு மட்டும்தான் பிரதமர் என்ற வகையில் பேசி வருகிறார். அவருடைய முக்கிய அரசியல் எதிரியான காங்கிரஸ் கட்சி தேசியவாத இயக்கங்களுக்கும் சுதந்திரத்திற்கான போராட்டத்திற்கும் வழிவகுத்துள்ளது.

மோடிக்கு வரலாறு தெரியவில்லை. அவர் தனது சொந்த வரலாற்றைப் பற்றி எழுதி வருகிறார். மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல், லாலா லஜபதி ராய், மவுலானா ஆசாத் ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் தலைவர்களாக இருந்தவர்கள். காங்கிரஸ் தலைவர்களாக யாரெல்லாம் இருந்தார்கள் என்பதை அறிய மோடி ஒருமுறை வரலாற்றைத் திரும்பப் படிக்க வேண்டும். அப்போது வேண்டுமானால், தவறான தகவல்களை பரப்புவதை மோடி நிறுத்தக்கூடும்.

மோடி ஆட்சியில் மக்கள் வறுமையில் இருந்து மீளவில்லை. பணமதிப்பழிப்பு, ஜிஎஸ்டி நடவடிக்கைகளால் வறுமைக்கோட்டுக்குக் கீழேதான் சென்றுள்ளார்கள்” என்று   அனந்த் சர்மா தெரிவித்தார்.