மெர்சல் படம் ரிலீஸுக்கு தயாரானதில் இருந்தே சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. தலைப்புக்கு உரிமை கொண்டாடி ஒருவர் பிரச்சினை செய்ய, பிறகு கோர்ட்டுக்குச் சென்று அதில் சாதகமான தீர்ப்பு வாங்கியது.

மெர்சல் விஜய்

மெர்சல் டீம். பிறகு, வனவிலங்கு நல வாரியம், மெர்சலுக்கு முட்டுக்கட்டை போட்டது. பிரச்சினை பெரிதாக முதல்வர் எடப்பாடியை சந்தித்து விஜய் பேசும் அளவுக்கு பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. அப்புறம் அது தீர்ந்தது. படத்துக்கும் யு.ஏ. சான்றிதழ் கிடைத்தது.

ஆனால் படம் ரிலீஸ் ஆகும் அன்றே இணையத்தில் வெளியிடுவோம் என்ரு பிரபல(!) தமிழ் ராக்கர்ஸ் அறிவித்தனர். அதன்படி முழு படத்தையும் இணையத்தில் வெளியிட்டுவிட்டனர். இதற்கிடையே மத்திய பாஜக அரசின் ஜி.எஸ்.டி, உட்பட சில நடவடிக்கைகளை படத்தில் மோசமாக சித்தரித்திருப்பதாக பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்து அக்காட்சிகளை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.

இடையில் கர்நாடகாவில் இப்படத்தை வெளியிட முடியாமல் தடுத்துவரும் கன்னட வெறியர்கள் பிரச்சினை வேறு. இப்போது படத்தின் ஒரு காட்சி தமிழ் பாரம்பரிய மருத்தவர்களான சித்த வைத்தியர்களையும் மற்றும் யுனானி மருத்தவர்களையும் புண்படுத்தி இருக்கிறது.

அந்த காட்சி என்னவென்றால்…

வேட்டி கட்டியிருக்கும் விஜய்யை பார்த்த ஒருவர், “நீ எம்.பி.பி.எஸ் டாக்டர்தானா” என்று சந்தேகத்தோடு கேட்டு, “இல்லே.. சித்தா,யுனானி அந்த மாதிரி ஏதாவதா..” என்கிறார் முகத்தைச் சுழித்தபடி.

அதற்கு விஜய், “இல்ல டாக்டர்.. எம்.பி.பி.எஸ். எம்.டி” என்கிறார்.

இக்காட்சியைக் குறிப்பிட்டு, “.. சித்தா, யுனானி என்றால் இழிவானது என்பது போல காட்சி அமைத்திருக்கிறார்கள்” என்று அந்த மருத்துவர்கள் ஆதங்கத்துடன் சமூகவலைதளங்களில் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார்கள்.