இதுவே என் கடைசி தேர்தல் : சித்தராமையா அறிவிப்பு

--

மைசூரு

ர்நாடக முதல்வர் சித்தராமையா இதுவே தமது கடைசி தேர்தல் என கூறி உள்ளார்.

கர்நாடகாவில் கடும் பரபரப்புக்கிடையே நேற்று சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது.   தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பல்வேறு விதமாக முடிவுகள் வெளியாகி உள்ளன.    ஒவ்வொரு கருத்துக் கணிப்பும் ஒவ்வொரு விதமாக அமைந்துள்ளது.   இது அனைத்துக் கட்சியினரையும் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.   ஆனால் இந்தக் குழப்பத்தில் பாதிக்கப்படாமல் கர்நாடக முதல்வர் சித்தராமையா மைசூரில் செய்தியாளர்களிடம் பேசி உள்ளார்.

அப்போது அவர், “இந்த தேர்தல் தான் எனக்கு கடைசி தேர்தல் ஆகும்.   இனி வரும் தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை.  ஆயினும் அரசியலில் தொடர்ந்து பணி ஆற்ற உள்ளேன்.  இந்த தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை முதல்வர் ஆக்க விரும்பினால் எனக்கு ஆட்சேபணை இல்லை.   கட்சியின் எந்த முடிவுக்கும் நான் கட்டுப்படத் தயார்.   இதுவரை எனக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறி உள்ளார்.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் குறித்து சித்தராமையா தனது டிவிட்டரில், “இது போன்ற கருத்துக் கணிப்புக்கள் இன்னும் 2 நாட்களுக்கு நல்ல பொழுது போக்காக அமையும்.  இந்த கருத்துக் கணிப்பை நம்புவது  ஆற்றின் சராசரி ஆழம் 4 அடி என்பதை நம்பி நடு ஆற்றில் இறங்குவதற்கு சமம்.   அன்பானவர்களே, எனது நலம் விரும்பிகளே,  கருத்துக் கணிப்பைப் பர்றி கவலைப்படாமல் வார இறுதியை கொண்டாடி மகிழுங்கள்” என பதிந்துள்ளார்.