பெங்களூரு

ர்நாடக மாநில அரசியல் குழப்ப நிலவரம் குறித்து முன்னாள் முதல்வர் சித்தராமையா டிவிட் வெளியிட்டுள்ளார்.

கர்நாடகாவில் தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது நடக்கும் என்னும் நிலை உள்ளது  இது குறித்து கர்நாடக சபாநாயகர், ஆளுநர், முதல்வர் உள்ளிட்ட பலரும் பலவித கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.   இன்று ஆளுநர் அளித்துள்ள  இரண்டாம் கடிதத்தில் மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தின் முதல்வராக கடந்த 2013 முதல் 2018 வரை பதவி வகித்தவர் சித்தராமையா ஆவார்..  இவர் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினர் ஆவார்.  இதைத் தவிர காங்கிரஸ் கட்சியின் பல அமைப்புக்களையும் கவனித்து வருகிறார்.  அவர் தனது டிவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

சித்தராமையா, ”கர்நாடக பாஜக தற்போதுள்ள நிலையை ஒரு வர்த்தகமாக எண்ணுவதால் கடும் அழுத்தத்திலுள்ளது. தற்போது அவர்கள் ஆட்சியைப்  பிடிக்க விரும்புவதால் சிலருக்கு பணம் அளித்துள்ளனர்.  ஆனால் நமது மக்களவை ஜனநாயகம் என்பது இயங்குவது இப்படி இல்லை” என பதிந்துள்ளார்.

இந்நிலையில் கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி தனக்கு ஆளுநர் அனுப்பிய இரண்டாம் கடிதம் குறித்து இது ஆளுநர் மாளிகையில் இருந்து அரசுக்கு வந்துள்ள காதல் கடிதம் என வர்ணித்துள்ளார்.