கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி

பெங்களுரூ:
ர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான சித்தராமையாவின் மகன் யதிந்திரா சித்தராமையாவுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக   சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி எதுவும் இல்லாததால் வீட்டிலேயே தனிமைப் படுத்தப் பட்டுள்ளதாக கட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 40 வயதான யதிந்திரா சித்தராமையா முதல் முறையாக, மைசூர் மாவட்டம் வருணா சட்டமன்ற பிரிவில் எம்எல்ஏவாக உள்ளார்.
இதைப்பற்றி மாநில மருத்துவ கல்வி அமைச்சர் கே. சுதாகர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: யதிந்திரா சித்தராமையா கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அவர் விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டிருந்தார்.


யதிந்திரா சித்தராமையாவின் மருத்துவர் சமீபத்தில் அவருடன் தொடர்பு கொண்டவர்கள் பரிசோதனை செய்து கொள்ளும்படியும், வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளும் படியும் அறிவித்துள்ளார்.
இதைப்பற்றி யதீந்திரா சித்தராமையாவும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்: நான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளது தற்போது தெரியவந்துள்ளது, ஆகவே கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் தங்களை வீட்டில் தனிமைபடுத்தி கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன், என்று கன்னடத்தில் ட்வீட் செய்திருந்தார்.


71 வயதான சித்தராமையா ஆகஸ்ட் 3-ஆம் தேதி கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரியவந்ததையடுத்து கர்நாடகாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சித்தராமையாவின் நிலை நன்றாக உள்ளது என்று  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக முதலமைச்சரான பி எஸ்  எடியூரப்பாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


முதலமைச்சர் எடியூரப்பாவின் நிலை சீராக உள்ளது என்றும் அவர் மருத்துவமனையில் இருந்தபடியே தன்னுடைய கடமைகளை செய்துவருகிறார் என்றும் மருத்துவ அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.