சென்னையில் விரைவில் கொரோனா சித்த மருத்துவச் சிகிச்சை மையங்கள் அதிகரிப்பு

சென்னை

சென்னையில் கொரோனா சிகிச்சைக்கான சித்த மருத்துவ மையங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவ மையங்கள் இயக்கி வருகின்றன.   இவை ஜவகர் பொறியியல் கல்லூரி, வைஷ்ணவா கல்லூரி மற்றும் அம்பேத்கர் கல்லூரி ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. இந்த  மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 539 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஜவகர் பொறியியல் கல்லூரியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், “கொரோனா சிகிச்சையில் சித்த மருத்துவம் நல்ல பலன் அளித்துள்ளது.  இன்று 30 பேர் குணமாகி உள்ளனர். இதுவரை 539 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.   இவர்கள் அனைவரும் அறிகுறியுடன் இருந்த கொரோனா நோயாளிகள் ஆவார்கள்.

இவர்களில் ஒருவர் 90 வயதானவர் ஆவார். இதைத் தவிர 80 வயதுக்கு மேற்பட்ட மூவர் மற்றும் 70 வயதுக்கு மேற்பட்ட 11 பேர் முழு குணம் அடைந்துள்ளனர்.   இந்த சிகிச்சை மையங்களை அலோபதி மருத்துவர்களும் மேற்பார்வை செய்து வருகின்றனர்.   தற்போது மூன்று இடங்களில் இந்த சித்த மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.

இது போல் கோரோனா சித்த மருத்துவ மையங்கள் விரைவில் மேலும் 2 அல்லது மூன்று அதிகரிக்கப்பட உள்ளன.   இவற்றில் ஒன்று அரசு மருத்துவக் கல்லூரியில் இணைக்கப்படும் 600 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையமாக இருக்கும். இது குறித்து சுகாதாரத் துறையுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

கார்ட்டூன் கேலரி