சென்னை:
கொரோனா நோயாளிகளுக்கு 12 இடங்களில் சித்த மருத்துவ மையம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.

ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி பொது மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், ஸ்டான்லி மருத்துவமனையில் 1,950 கொரோனா படுக்கைகள் உள்ளன. ஏற்கனவே 1,200 படுக்கைகள் இருந்த நிலையில், 750 கூடுதல் படுக்கைகள் தயார் செய்யப்பட்டு 1,950 படுக்கைகள் உள்ளன. 800 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் நிரம்பியுள்ளன. சாதாரண படுக்கைகள் 100 வரை காலியாக உள்ளன. பொறுப்பேற்பதற்கு முன்பே உயர் அலுவலர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் புதிதாக 12,500 ஆக்ஸிஜன் வசதி அடங்கிய படுக்கைகள் அமைக்க உத்தரவிட்டுள்ளார் முதல்வர். மேலும் 12,500 படுக்கைகள் தேவை என மருத்துவர்கள் கேட்டார்கள். அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

நோயாளிகள் மருத்துவமனை வந்த ஒரு மணி நேரத்தில் படுக்கை கிடைக்க வசதி செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு நாட்களில் வீடு வீடாக மருத்துவ பணியாளர்கள் சோதனை செய்வார்கள். தொடக்க நிலை தொற்றாளர்களுக்கு சித்தா, ஆயுர்வேதா மருத்துவம் கொடுக்க முயற்சி செய்யப்பட்டுள்ளது. இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் தேவையறிந்து உடனடியாக அனுப்பப்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் தட்டுப்பாடு தமிழகத்தில் இப்போது இல்லை. இனியும் ஏற்படாது’ என்று தெரிவித்தார்.

இந்நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு 12 இடங்களில் சித்த மருத்துவ மையம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், லேசான அறிகுறிகள் உள்ள கொரோனா நோயாளிகள் சித்த மருத்துவ மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.