காங்கிரஸிலிருந்து சித்து விலகமாட்டார் – அடித்துச் சொல்லும் அமரீந்தர் சிங்!

சண்டிகர்: சித்துவுக்கு கட்சியில் எப்போதும் உரிய மரியாத‍ை உண்டு எனவும், அவர் காங்கிரஸிலிருந்து விலகப் போவதாக வெளியாகும் தகவலில் உண்மையில்லை என்றும் கூறியுள்ளார் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்.

கடந்த 2017ம் ஆண்டு பாரதீய ஜனதாவிலிருந்து விலகிய சித்து, பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அத்தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்று, காங்கிரஸ் அரசில் அமைச்சராகவும் பதவியேற்றார்.

இந்நிலையில், அவருக்கு கட்சியின் மீது அதிருப்தி ஏற்பட்டிருப்பதாகவும், 2022ம் ஆண்டு நடைபெறவுள்ள மாநில சட்டசபைத் தேர்தலை குறிவைத்து அவர் ஆம் ஆத்மி கட்சியில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

தேர்தல் வியூக வியாபாரி பிரஷாந்த் கிஷோர் இதற்கான சூத்திரதாரியாக செயல்படுகிறார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கும், அமைச்சர் சித்துவும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது முதல்வர் கூறியதாவது, “சித்துவுக்கு காங்கிரஸ் கட்சியில் எப்போதும் மரியாதை உண்டு. அவர் ஆம் ஆத்மியில் இணையப் போவதாக வரும் செய்திகளில் உண்மையில்லை. அவர் கட்சியிலிருந்து விலகமாட்டார்” என்றார்.