உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவில் இதுவரை 147 பேரைப் பாதித்துள்ளது. இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக கேரளாவில் அதிக அளவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று காணப்படுகிறது. இதனால் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், தமிழக அரசு கல்விக் கூடங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவற்றையும் மார்ச் 31-ம் தேதி வரை மூட உத்தரவிட்டுள்ளது.

இதனால் மார்ச் வெளியீட்டுக்குத் திட்டமிடப்பட்ட படங்கள் யாவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் சித்தார்த் :-

”கரோனா வைரஸ் பாதிப்பு விவகாரத்தில் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். கையை சோப்புப் போட்டுக் கழுவுங்கள். யாருடனும் நெருங்கிப் பழகாதீர்கள். கொஞ்ச நாளைக்கு கை கொடுப்பது, கட்டிப் பிடிப்பதைக் குறைக்கலாம். கூட்டமாக இருக்கும் இடங்களுக்குச் செல்வதைத் தவிருங்கள்.

இதெல்லாம் செய்தாலும் ரொம்ப பயப்படுகிற நிலை என்று எதுவும் கிடையாது. தமிழ்நாட்டில் இன்னும் கரோனா வைரஸ் அந்த அளவுக்கு வரவில்லை. தமிழக அரசும் அவர்கள் நிலையிலிருந்து என்ன பண்ண வேண்டுமோ அதைச் செய்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் கரோனா வைரஸ் முற்றிலும் ஒழிய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். கூடிய விரைவில் அனைவரும் பழைய நிலைக்குத் திரும்புவோம்” என கூறினார் .