சென்னை:

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மாநிலம் முழுவதும்  மாபெரும் கையெழுத்து இயக்கம்”  நடத்தப்படும் என்று  தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

சிஏஏ சட்டத்துக்கு எதிராக அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சியின் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, செய்தி யாளர்களை சந்தித்த ஸ்டாலின்,  குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தவிருப்பதாக கூறினார்.

“மதச்சார்பற்ற முற்போக்குக் கட்சித் தலைவர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அனைத்து குடிமக்களையும் பாதிக்கக்கூடிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர், சிஏஏ சட்டத்துக்கு எதிராக மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட உள்ளதாகவும்,   தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய மக்களைச் சந்தித்து அவர்களிடம் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கையெழுத்து பெறப்படும் என்றவர், இந்த கையெழுத்து இயக்கம், வரும் பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி முதல் வரை நடத்தப்படும் என்றார்.

பொதுமக்கள் கையெழுத்துக்களை பெற்றதும், அதை  இந்திய குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து வழங்க முடிவு செய்திருக்கிறோம் என்றார்.

கையெழுத்து இயக்கத்தை  தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும், ஒன்றியங்களிலும், கிளைகளிலும், ஊராட்சி பகுதிகளிலும், மதச்சார்பற்ற கூட்டணியில் இருக்கக்கூடிய அனைத்து கட்சிகளும் இந்தப் பணியில் ஈடுபட உள்ளனர். இந்த முயற்சிக்கு கட்சி சார்பற்ற பொதுமக்கள், வணிகர்கள், மாணவர்கள் த்தனை பேரும் ஆதரவு தர வேண்டும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

மதுராந்தகம் அருகே தந்தை பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு பதில் அளித்த ஸ்டாலின், “95 ஆண்டுகாலம் தமிழகத்திற்காக குரல் கொடுத்த, போராடிய தந்தை பெரியாரை இழிவு படுத்துவதென்பது வேதனைக்குரிய ஒன்று. அந்தச் செயலில் ஈடுபட்டோர் மீது இந்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.” என்றார்.

“நீட் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கவேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டும் அதற்கான எந்த பதிலும் வரவில்லை. தற்போது நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அ.தி.மு.க வழக்குப் போட்டுள்ளது, தும்பை விட்டுவிட்டு வாலை பிடிப்பது போல் உள்ளது. அடிமை ஆட்சி நடைபெறுவதால் மத்திய அரசு துணிந்து செயல்படுகிறது.”

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.