இன்று அனுமன் ஜெயந்தி தமிழ்நாடெங்கும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது தெரிந்ததே.   பல ஆலயங்களிலும் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு விசேஷ பூஜைகள் செய்யப்படுகின்றன.   நாமக்கல்லில் உள்ள 18 அடி உயரத்தில் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட அனுமன் சிலைக்கு 1,08,000 வடைகளைக் கொண்ட வடைமாலை சாற்றப்பட்டது.   இதற்கு ரூ.13 லட்ச ரூபாய் செலவானதாகக் கூறப்படுகிறது.     இந்த  அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுவது பற்றிய விவரங்களை இங்கே காண்போம்.

அனுமன் பிறந்த நாள் அனுமன் ஜெயந்தி என கொண்டாடப்படுகிறது.   ஆனால் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மார்கழி மாத அமாவாசை அன்றும் வட இந்தியாவில் சித்ரா பவுர்ணமி மற்றும் வைகாசி மாத பவுர்ணமி தினத்திலும் கொண்டாடப் படுகிறது.   முக்கியமாக அனுமன் பூஜை என்றாலே வடைமாலை சாற்றுவது தென் இந்தியாவில் வழக்கம்.   ஆனால் வட இந்தியாவில் ஜாங்கிரி மாலை சாற்றப் படுகிறது.   இது குறித்து காஞ்சிப் பெரியவர் சந்திர சேகரேந்திர சுவாமிகள் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அனுமன் தனது குழந்தைப் பருவத்தில் சூரியனைப் பார்த்து பழம் என நினைத்து அதைப் பிடிக்க பறந்து சென்றுள்ளார்.   மிகச் சிறிய குழந்தை சூரியனை விழுங்குவதற்கு பறந்து வந்த வாயு புத்திரனை யாராலும் தடுக்க முடியவில்லை.   அதே நேரத்தில் சூரிய கிரகணமான அன்று  ராகுவும் சூரியனை பிடிக்க வந்துக் கொண்டிருந்தது.   அனுமனிடம் ராகு தோற்றுப் போனார்.   அதையொட்டி அனுமனுக்கு ஒரு அங்கீகாரத்தை ராகு அளித்துள்ளார்.   அதன்படி உளுந்தால் ஆன உணவுப் பண்டம் தயாரித்து அனுமனை வணங்குபவரை எக்காலத்திலும் தான் பீடிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த உளுந்தினால் ஆன உணவுப் பண்டம் தன் உடல் (பாம்பு) போல வளைந்து இருக்க வேண்டும் ட்ன கூறி உள்ளார்.  அதனால் நாம் உளுந்தினால் ஆன வடை மாலை சாற்றுகிறோம்.    வடை, மற்றும் ஜாங்கிரி ஆகியவை இரண்டுமே உளுந்தால் ஆனது.    தென் இந்தியாவில் உப்பு அதிகம்,  வட இந்தியாவில் சர்க்கரை அதிகம் உற்பத்தி ஆகிறது.   அதனால் இங்கு வடை மாலையும்,  வட இந்தியாவில் ஜாங்கிரி மாலையும் சாற்றப்படுகிறது.

இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.