குபேர கிரிவலம்  2019

வரும் கார்த்திகை மாதம் 8 ஆம் தேதி (24.11.2019) அன்று நடைபெற உள்ள குபேர கிரிவலம் குறித்த நெட்டிசன் பிரபுவின் முகநூல் பதிவு

கார்த்திகை மாதம் வரும் சிவராத்திரி அன்று வான் உலகிலிருந்து செல்வத்தின் அதிபதியான குபேர பகவான் பூமிக்கு வருகிறார். வந்து அவர் திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில்  7 -வது லிங்கமான குபேர லிங்கத்துக்கு தினப்பிரதோஷ நேரத்தில் (மாலை 4.30 முதல் 6.00 வரை) பூஜை செய்கிறார். அப்படி பூஜை செய்துவிட்டு, இரவு 7 மணியளவில் குபேர பகவானே கிரிவலம் செல்கிறார்.

அதே நாளில் நாமும் அவருடன் மிகவும் பக்தியுடன் குபேர நாமம் சொல்லிக்கொண்டே கிரிவலம் சென்றால், நமக்கு அண்ணாமலையின் அருளும், சித்தர்களின் அருளும், குபேரனது அருளும் கிடைக்கும். இதன் மூலம் நாம், நமது முன்னோர்கள் செய்த பாவங்கள் தீரும். நாம், நமது அடுத்த ஏழு தலைமுறையும் நிம்மதியாகவும், செல்வச்செழிப்புடனும் இருக்கலாம்.

அன்று குபேரன் விண்ணில் இருந்து மண்ணுக்கு வருகிறார். அவருடன் சேர்ந்து குபேர லிங்கத்தை வணங்கி அவருடன் சேர்ந்து கிரிவலம் சென்றால் அடுத்த ஒரு வருடத்திற்கு நமது வருமானம் நியாயமான விதத்தில் அதிகரிக்கும்.

இந்த ஒரு மணி நேரத்தில் குபேர லிங்கத்தைத் தரிசிக்க இயலாவிட்டால் வருத்தப்பட வேண்டாம், மானசீகமாகக் குபேர லிங்கம் இருக்கும் இடத்தை நோக்கி வேண்டிக் கொண்டால் போதும். இரவு 7 மணி ஆனதும் குபேர லிங்கத்தில் இருந்து புறப்பட்டு குபேர லிங்கத்தில் கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும். கிரிவலம் முடித்ததும் வேறு எந்த கோவிலுக்கும் செல்லாமலும், பிறர் வீடுகளுக்குச் செல்லாமலும் நேராக அவரவர் வீடு திரும்ப வேண்டும்.

கிரிவலம் முடிந்து அன்று இரவு கண்டிப்பாக அண்ணாமலையில் தங்க வேண்டும் என்பது ஐதீகம். தங்கி, மறு நாள் வேறு எங்கும் செல்லாமல் அவரவர் ஊருக்குச் செல்ல வேண்டும் என்பது எழுதப்படாத சம்பிரதாயம். அப்படிச் செய்தால் மட்டுமே குபேர கிரிவலத்தின் பலன் நமக்குக் கிடைக்கும் எனப் பல ஆன்மிக வாதிகள் தெரிவிக்கின்றனர்.