மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேஸ்வரர்  ஆலயம் மதுரை.
பிறக்க முக்தி திருவாரூர்,  இறக்க முக்தி காசி,  நினைக்க முக்தி திருவண்ணாமலை தரிசிக்க முக்தி சிதம்பரம்,   ஆனால் மதுரை என்கிற பெயரைக் கேட்டாலே முக்தி வந்து சேரும்.
தவம் செய்ததாம் மதுரையின் தெருக்கள் எல்லாம் என்று சொன்னால் மதுரை மாநகரம் எத்தனை தவம் செய்து இருக்க வேண்டும்.
இறைவனும் இறைவியும் வந்து இருந்து 64 திருவிளையாடல்கள் பண்ணிய புண்ணிய பூமி இந்த மதுரை மாநகர்.
மீனைப் போன்ற கண்களை உடையவள் என்பதால் அம்பிகைக்கு மீனாட்சி என்ற திருநாமம் அமையப்பெற்றது.
மீன் எப்படி நீரில் இரவும் பகலும் தூங்காதது போல அம்பிகை தூங்காமல் இருந்து அரசு ஆட்சி செய்வதால் மதுரை மாநகரைத் தூங்கா நகரம் என்றும் சொல்லுவார்கள்.
ஒரு கோவில் திருவிழா என்று சொன்னால் வருடத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை அப்படித்தான் இருக்கும் ஆனால் வருடம் முழுவதும் திருவிழா என்று சொன்னால் அது மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் மட்டுமே அதனால் மதுரையை விழா நகரம் என்றும் சொல்லுவார்கள்.
முக்குருணி விநாயகர் சன்னதியில் தொடங்கி ஆயிரங்கால் மண்டபம், அர்த்தமண்டபம்,
சபா மண்டபம், அலங்கார மண்டபம், பொற்றாமரைக்குளம்,  இறைவன் கால் மாறி ஆடிய வெள்ளியம்பலம் என எத்தனையோ சிறப்புகளை தன்னகத்தே கொண்டது மதுரை மாநகரம்.
சிவ பெருமானின் பஞ்ச சபைகளில் மதுரை வெள்ளியம்பல சபை ஆகும்.
மீனாட்சி கோவிலின்  அமைப்பு கோபுரத்தின் அழகு பார்க்கப் பார்க்க நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
மதுரையை ஆட்சி செய்த மலையத்துவஜ பாண்டிய மன்னனுக்கும், காஞ்சனமாலைக்கு நீண்ட நாட்களாகக் குழந்தைப்பேறு இல்லாமல் இருந்து இந்திரனின் ஆலோசனைப்படி புத்திர காமேஷ்டி யாகத்தை மேற்கொண்டு அந்த யாகத்திலிருந்து மூன்று வயது சிறுமியாக மரகத திருமேனியுடன் அவதாரம் செய்தாள் அன்னை மீனாட்சி.
அந்த குழந்தைக்குத் தடாதகை என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். அந்த பெயருடன் வளர்ந்து அம்பிகை அற்புதமாகச் செங்கோல் தாங்கி இறைவனை மணந்து அரசாட்சி செய்கின்ற உன்னதமான நகரம் மதுரை.
கூன் பாண்டியனுடைய வெப்பு நோயைத் திருஞானசம்பந்தர் மந்திரமாவது நீறு என்று தொடங்கக்கூடிய திருப்பதிகத்தைப் பாடி கூன்பாண்டியன் உடைய வெப்பு நோயைத் தீர்த்து அதன்பின் அவர் நின்றசீர் நெடுமாறன் என்று பெயர் பெற்றான்.
அதன் அடையாளமாக இன்றும் மதுரை மீனாட்சி அம்மன் சன்னதிக்கு நேர் எதிரே கொடிக் கம்பத்தின் கீழே ஒரு திருநீறு வைத்து அங்கு இருக்கக்கூடிய மடைப்பள்ளி சாம்பலைக் கொண்டு வந்து அங்கே வைத்து அந்த பாடலையும் அங்கு எழுதி வைத்து இருப்பது இன்றளவும் அதை நாம் பார்க்கலாம்
இப்படி எத்தனையோ சிறப்புகளை தன்னகத்தே கொண்டது மதுரை.