டெக்னாஃப், மியான்மர்

மியான்மர் – வங்க தேச எல்லையில் தவிக்கும் ரோஹிங்கியா மக்களுக்கு கல்சா எயிட் என்னும் சீக்கிய தன்னார்வுத் தொண்டு நிறுவனம் உதவிகளை செய்கிறது.

மியான்மரில் ஏற்பட்ட கலவரத்தில் லட்சக்கணக்கான ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் உயிர் பிழைக்க வங்கதேசத்தை தஞ்சம் அடைந்துள்ளனர்.  அங்கு அவர்களுக்கு தங்க இடமும், உண்ண உணவுமின்றி வாடுகின்றனர். அவர்களுக்கு உதவ சீக்கிய சமுதாய தன்னார்வு தொண்டு நிறுவனம் ஒன்று மியான்மர் – வங்க தேச எல்லையில் உள்ள டெக்னாஃப் என்னும் இடத்துக்கு சென்றுள்ளது.

அந்த தொண்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அமர்பிரீத் சிங் தெரிவித்ததாவது :

“நாங்கள் அங்கு சென்ற முதல் நாளில் இருந்தே எங்கள் உதவி நடவடிக்கைகளை தொடங்கி உள்ளோம்.  நாங்கள் சுமார் 50000 பேருக்கு உதவுவதற்கு தேவையான பொருட்களுடன் இங்கு வந்தோம்.  ஆனால் இந்த இடத்தில் மட்டுமே சுமார் 3 லட்சத்துக்கும் மேல் அகதிகள் உள்ளனர்.  மழை வேறு பெய்வதால் அவர்களுக்கு தங்கவும் இடமின்றி தவிக்கின்றனர்.

நாங்கள் அவர்களுக்கு ஒரு சமுதாய சமையல் அறையையும் தங்க இடமும் அளித்துள்ளோம்.  நாங்கள் எடுத்துக் கொண்டு சென்ற தார்ப்பாய்களை அவர்களுக்கு அளித்துள்ளோம்.  ஆனால் ஏற்கனவே சொன்னபடி அதுவும் எங்களுக்கு போதவில்லை.  இன்னும் பொருட்களை கொண்டு வர ஏற்பாடுகள் செய்து வருகிறோம்.  இங்குள்ள முகாம்களில் சுமார் 50000 பேர் வரை மட்டுமே தங்க முடியும்.  ஆனால் ஒரு முகாமில் ரூ. 1 லட்சத்துக்கும் மேல் உள்ளனர்.

சிறு சிறு குழந்தைகள் உணவுக்கும் உடைக்கும் யாசிக்கும் நிலைமை உள்ளது.  எனவே நாங்கள் சமுதாய சமையல் அறை மூலம் இவர்களுக்கு இந்த பிரச்னை முடியும் வரை உணவளிக்க திட்டம் இட்டுள்ளோம்.  முகாம்களில் இடம் கிடைக்காதவர்கள் தெரு ஓரங்களில் பரிதாபமாக உட்கார்ந்திருக்கின்றனர். கிட்டத்தட்ட 10 நாட்கள் நடந்தே இங்கு வந்துள்ளனர்.

எங்கள் தொண்டு நிறுவனத்தில் இருந்து மற்றொரு குழு விரைவில் இன்னும் சில பொருட்களுடன் இங்கு வந்து சேரும்.  அதன் பிறகு இந்தப் பற்றாக்குறைகள் நீங்கி விடும்.  வங்க தேச தலைநகர் டாக்காவில் இருந்து டெக்னாஃப் வர குறைந்தது 10 மணி நேரம் ஆகிறது.  சாலை வசதியின்மை, மழை போன்றவைகளால் உடனடியாக எங்களுக்கு மேலும் உணவுப் பொருட்கள் கொண்டு வர முடியவில்லை.  ஆயினும் எங்களால் முடிந்த அளவு எவ்வளவு உதவ முடியுமோ, அவ்வளவு உதவ தயாராக உள்ளோம்” என கூறி உள்ளார்.