ர்தார்பூர்

நேற்று கர்தார்பூருக்கு செல்லும் பாதையின் முதல் பயணத்தைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

சீக்கிய மத நிறுவனரும் முதல் தலைவருமான குரு நானக் நினைவிடம் பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் அமைந்துள்ளது.  இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது கர்தார்பூருக்கு யாத்திரை செல்ல வேண்டும் என்னும் ஆசையுடன் வாழ்ந்து வருகின்றனர்.    இந்துக்களுக்குக் காசி, இஸ்லாமியர்களுக்கு மெக்கா மதினா போலச் சீக்கியர்களுக்கு கர்தார்பூர் புனிதமான பயணமாகும்.    இதற்காக இந்தியாவில் இருந்து பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் குர்தாஸ்பூர் நகரில் அமைந்துள்ள தேரா பாபா நானக் குருத்வாராவில் இருந்து கர்தார்பூர் வரை அமைக்கப்பட்ட இந்த பாதையின் முதல் பயணத்தைப் பிரதமர் மோடி நேற்று கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார்.  இந்த பயணம் அகாலி தக்த் தலைவர் கியானி ஹர்பிரீத் சிங் தலைமையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட  தலைவர்களுடன் நேற்று தொடங்கியது.  இந்த முதல்  பயணத்தில் 562 இந்திய யாத்திரிகர்கள் கலந்துக் கொண்டனர்.

இந்த  புனித யாத்திரைக்குப் பாதை அமைக்கக் கோரி சுமார் 70 வருடங்களுக்கும் மேலாகச் சீக்கிய மக்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.  நேற்று இந்த முதல் யாத்திரை தொடங்கிய போது சீக்கியர்கள் பலர் மிகவும் உணர்ச்சிவசத்துடன் காணப்பட்டனர்.    பாகிஸ்தானின் கர்தார்பூர் பகுதியில் பாதையைப் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் திறந்து வைத்தார்.

முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், “இரு நாடுகளுக்கிடையே உள்ள உறவைப் பலப்படுத்த இது ஒரு நல்ல தொடக்கமாகும்.   இது நமக்கு ஒரு மிகப் பெரிய தினம் ஆகும்.” எனத் தெரிவித்துள்ளார்.   இந்த முதல் யாத்திரையில் பங்கு பெற்ற பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்,” இந்த முதல் புனிதப் பயணத்தில் பங்கு கொண்டமைக்கு ஒரு உண்மையான பக்தனாகப் பெருமிதம் அடைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பகுதியில் இந்தியச் சீக்கிய யாத்திரிகர்களுக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், “சிக்கிய யாத்திரிகர்கள் முகத்தில் தற்போது ஒரு தனி மகிழ்ச்சியை என்னால் காண முடிகிறது.  சீக்கியர்களுக்கு கர்தார்பூர் என்பது மெக்கா மதினா போன்றதாகும்.  ஒரு இஸ்லாமியர் மதீனாவில் இருந்து 3 கிமீ தொலைவில் இருந்தும் அதைக் காண முடியாத நிலையைப் போல் சீக்கியர்கள் இருந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.