அருள்மிகு சிக்கல் நவநீதேஸ்வரர் கோவில் !!

அருள்மிகு சிக்கல் நவநீதேஸ்வரர் கோவில் குறித்த ஒரு பதிவு

சிங்கார வேலனுக்கு, அம்மன் தன் சக்தியை #வேலாக வழங்கிய காவிரி தென்கரையில் அமைந்துள்ள அருள்மிகு நவநீதேஸ்வரர் கோவில் நாகப்பட்டினத்திலுள்ள சிக்கல் என்ற ஊரில் உள்ளது.

தல வரலாறு :

விண்ணுலகத்திலிருக்கும் காமதேனு பசு, பஞ்ச காலத்தில் மாமிசம் தின்று விட்டதாகவும், இதை அறிந்த சிவன், பசுவை புலியாக மாறும் படி சபித்ததாகவும் கூறப்படுகிறது. வருந்திய புலி இறைவனிடம் மன்னிப்பு கேட்டது. மனமிறங்கிய சிவன், பூலோகத்தில் மல்லிகாரண்யம் என்ற தலத்தில் நீராடி, அங்குள்ள இறைவனைப் பூஜித்தால் சாபம் விலகும் என்றார்.

சிவனின் அறிவுரைப்படி காமதேனு இத்தலம் வந்து குளம் அமைத்து நீராடிய போது, அதன் மடியில் இருந்த பால் பெருகி குளம் முழுவதும் பால் பொங்கியது. இதனால் இந்த குளம் #பாற்குளம் ஆனது. தேங்கிய பாற்குளத்திலிருந்து வெண்ணெய் திரண்டது.

சிவனின் ஆணைப்படி வசிஷ்டர் இத்தலம் வந்து, இந்த வெண்ணெய் மூலம் லிங்கம் அமைத்து வழிபாடு செய்தார். இதனால் இத்தல இறைவன் வெண்ணெய்_நாதர் ஆனார். வழிபாடு முடிந்தவுடன் இந்த லிங்கத்தை பெயர்த்து எடுக்கும் போது அது வராமல் #சிக்கலை ஏற்படுத்தியதால் இத்தலம் #சிக்கல் என்றழைக்கப்பட்டது.

தல சிறப்பு:

இத்தலத்தில் இறைவன் #சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கந்தசஷ்டி திருநாளின் முதல் நாள் முருகன் இத்தல அம்மனிடமிருந்து வேல் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் இங்குள்ள அம்மனுக்கு வேல்நெடுங்கண்ணி என்ற பெயர் ஏற்பட்டது.

இங்குள்ள சிங்கார வேலர் வேல் வாங்கி வீராவேசத்துடன் வரும் சமயத்தில் அவர் திருமேனியில் வியர்வைத்துளிகள் உண்டாவதைச் சஷ்டி காலத்தில் பார்க்கலாம்.

சிவன், பெருமாள், முருகன், அனுமன் என நால்வரும் இத்தலத்தில் அருள்பாலிப்பது கோயில் தனிச் சிறப்பாகும். அருணகிரிநாதர் இத்தல முருகனைக் குறித்து திருப்புகழ் பாடியுள்ளார். கோச்செங்கட் சோழன் கட்டிய 72 மாடக்கோயில்களில் இதுவும் ஒன்று.

பிரார்த்தனை :

கஷ்டங்கள் தீர இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.  சத்ரு_சம்கார திரிசதை அர்ச்சனை செய்தால் எதிரிகள் தொந்தரவு விலகி நலம் விளையும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக் கடன் :

பிரார்த்தனை நிறைவேறியதும் இத்தல இறைவன் வெண்ணெய் நாதருக்கு அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் உச்சிகால_பூஜையின் போது வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்கின்றனர்.

இருப்பிடம் :

நாகப்பட்டினத்திலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் சுமார் 5 கி.மீ. தொலைவில் திருத்தலம் உள்ளது!!!