டில்லி

சிக்கிம் மாநில முதல் விமான நிலையம் தனது சேவையை நவம்பர் 30ல் துவங்குகிறது.

இமாசலப் பிரதேச பகுதியில் உள்ள சிக்கிம் மாநிலத்தில் பல புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள் உள்ளன.   ஆனால் அவைகளை சென்றடைய சாலைப் போக்குவரத்து மட்டுமே ஒரே வழியாக இருக்கிறது.    அதையொட்டி 2008ஆம் வருடம் சிக்கிம் மாநிலத்தில் ஒரு விமான நிலையம் துவங்க திட்டமிடப்பட்டிருந்தது.   விமான நிலையத்தை 2012ஆம் வருடம் துவங்க திட்டமிடப்பட்டிருந்தது.

சிக்கிம் மாநிலத் தலைநகரான காங்க்டாக்கில் இருந்து 35 கிமீ தூரத்தில் அமைந்துள்ள பாக்யொங் நகரில் விமானம் அமைக்க திட்டமிடப்பட்டது.   ஆனால் உள்ளூர் மக்களிடம் இருந்து நிலம் பெற்றதற்கு தொகை அளிப்பதில் ஏற்பட்ட எதிர்ப்பால் இந்த திட்டம் தள்ளிப் போனது.    அந்த உள்ளூர் மக்கள் நீதிமன்றத்தை அணுகினர்.   நீதிமன்றம் மக்களுக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்ததை முன்னிட்டு அவர்களுக்கு ஈட்டுத் தொகை அளிக்கப்பட்டதும் பணிகள் தொடர்ந்தன.

தற்போது இயங்கத் தயாராக உள்ள இந்த விமான நிலையத்தின் முதல் பகுதி வரும் நவம்பர் 30ல் துவங்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.   இதை துவக்கி வைக்க நரேந்திர மோடியிடம் நேரம் ஒதுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.   நவம்பர் ஏழாம் தேதி சிக்கிம் மாநில முதல்வர் பவன் குமார் டில்லிக்கு வர உள்ளார். அந்த சமயத்தில் இந்த விழாவுக்கு பிரதமர், நாடாளுமன்ற சபாநாயகர், மற்றும் அமைச்சர்களை நேரில் அழைக்க உள்ளார்.

சுமார் 900 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த விமான நிலையம் சுமார் ரூ.300 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் சிக்கிம் மாநில சுற்றுலா மேம்படும் என தெரிவிக்கப்படுகிறது.   இது இமயமலையில் உள்ள அனைத்துச் சுற்றுலாத் தலங்களையும் இணைக்கும் எனவும்,  ரெயில் வசதி இந்த மாநிலத்தில் இல்லாததாலும், கூர்க்காலாந்து கிளர்ச்சியால் சாலை வசதி பாதிக்கப்பட்டதாலும்,  இந்த விமான நிலையத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதகாவும் தெரிய வந்துள்ளது.