கூடுதல் விடுமுறையை கொடுத்துப் பறித்த சிக்கிம் மாநில அரசு!

காங்டாக்: தனது ஊழியர்களுக்கு வாரம் 2 நாட்கள் வழங்கி வந்த விடுமுறையை ரத்துசெய்து, இனிமேல், இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகள் மட்டுமே விடுப்பு என்று அறிவித்துள்ளது சிக்கிம் மாநில அரசாங்கம்.

இந்தப் புதிய அறிவிப்பு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவித்துள்ளது சிக்கிம் மாநில அரசு.

கடந்த 2019ம் ஆண்டு மே மாதம், சிக்கிமில் புதிய அரசு பதவியேற்றவுடன், மாநில அரசின் ஊழியர்களுக்கு, வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டத்தை அறிவித்தது. அதற்கு முன்பாக, வாரத்திற்கு 6 நாட்கள் வேலை என்ற வழக்கமான நடைமுறை இருந்தது.

ஆனால், ஊழியர்களின் வேலைத்திறனில் அதிருப்தியடைந்த மாநில அரசு, தற்போது அந்த உத்தரவை ரத்துசெய்து, ஒரு மாதத்தில் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் மட்டுமே விடுமுறை என்று அறிவித்துள்ளது என்று அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிக்கிமில் தற்போது சிக்கிம் கிராந்திகரி மோர்ச்சா அரசு நடைபெற்று வருகிறது. அதிகளவு விடுமுறை அளித்தும், அரசு ஊழியர்கள் வேலையில் அக்கறை காட்டவில்லை என்று கூறப்படுகிறது.