சில்க் ஸ்மிதா: ஆணாதிக்கத்தால் உருகிய பொன்மேனி!

ட்டு மேனியும், பவளக் கண்களுமாய் பவனி வந்த சில்க் ஸ்மிதா, இந்த மனித வாழ்க்கையே வேண்டாம் என்று தன்னை மாய்த்துக்கொண்டு 22 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் அவரது பிறந்த நாளான இன்றும் சமூகவளைதளங்களில் அவரது படங்களை ஆர்வத்துடன் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள் பலர்.

ரசிகர்கள் மட்டுமல்ல.. திரைத்துறையினர்கூட “சில்க் போல அனைவரையும் ஈர்த்த நடிகை அவருக்கு முன்னும் பின்னும் இல்லை” என்று இன்றளவும் புகழ்கிறார்கள்.

இத்தனை புகழ், இத்தனை அழகு, எவ்வளவோ பணம் இருந்தும் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை என்னவோ  சோகமாய் துவங்கி, சோகமாய் தொடர்ந்து, சோகமாவே..கூடவே, மர்மமாயும் மடிந்தே போனது.

ஆந்திரமாநிலம் ஏலூரு என்ற சின்ன கிராமத்தில்தான் விஜயலட்சுமி பிறந்தார். ஆம்.. சில்க் ஸ்மிதாவின் இயற்பெயர் விஜயலட்சுமி.

ஆந்திராவில் பிறந்தாலும் அவரது பூர்வீகம் தமிழ்நாடு, கரூர்தான்.

பெயரில் லட்சுமி இருந்தாலும் வறுமையில்தான் பிறந்தார் விஜயலட்சுமி. குடும்பத்தில் கோரத்தாண்டவம் ஆடியது. இதனால் நான்காம் வகுப்போடு பள்ளிக்கூடத்தை பிரியவேண்டியதாயிற்று. தாயாருடன் வயல் வேலைகளுக்குச் சென்றாள் சிறுமி விஜயலட்சுமி.

விஜயலட்சுமி வளர ஆம்பித்தாள்.

வறுமையான வாழ்க்கைதான் என்றாலும் உடல் வளமையை பஞ்சமில்மல் வாரிக்கொடுத்திருந்தது  இயற்கை.

பெண்களுக்கு அழகே ஆபத்தாகிவிடுவது வழக்கம்தானே.. அதோடு வறுமையில் இருக்கும் பெண்ணுக்கு ஏற்படும் துயரங்களைக் கேட்க வேண்டுமா?  தினவெடுத்த ஆண்களின் கண்களை விஜயலட்சுமியை பார்வையிலேயே பலாத்காரம் செய்தன. அதிலும் திமிரெடுத்த ஆண்கள் சிலர் நேரடியாக அத்துமீறவும் முயன்றனர்.

இதனால் அஞ்சிய பெற்றோர், மிகச்சிறு வயதிலேயே விஜயலட்சுமிக்கு திருமணம் செய்துவைத்துவிட்டார்கள்.

“இதுதான் வாழ்க்கை.. இதுதான் பயணம்” என்று கணவனின் கரம்பிடித்துச் சென்றாள் விஜயலட்சுமி.

ஆனால் புகுந்த இடத்திலும்  அழகே அவளுக்கு எதிரியாக பேருருவம் எடுத்து நின்றது.

அவளது அழகை ரசிப்பதற்கு பதிலாக, சந்தேகக்  கண்கொண்டு பார்த்தான் கணவன்.

அவள் நின்றால் ஒரு அர்த்தம்.. நடந்தால் ஒரு அர்த்தம்  கற்பித்துப் பேசினான். ஒரு கட்டத்தில் வார்த்தைத் தாக்குதல்கள்.. அடி உதைகளாகவும் மாறின. உடலும் மனமும் காயப்பட்டாள் விஜயலட்சுமி.

கணவனோ சந்தேகக் கொடூரனாக இருக்கிறான்..  பிறந்தவீட்டுக்குச் சென்றுவிடலாம் என்றால் அங்க வறுமை வாசலிலேயே நின்று தடுக்கிறது.

என்ன செய்வது என்று தெரியாமல் அழுது தீர்த்தாள் விஜயலட்சுமி. வேறேதும் செய்யத் தெரியவில்லை.

வாழ்க்கை என்ற கொடூர இருள் அவளை அணு அணுவாக விழுங்கத்துவங்க ஆரம்பித்த அந்த நேரத்தில்தான் ஒரு சிறு வெளிச்சம் தென்பட்டது. உறவுப் பெண் ஒருவர் சென்னையில், திரைத்துறையில் இருந்தார். அதாவது இரண்டாம் கட்ட நட்சத்திரங்களுக்கு ஒப்பனை (மேக் அப்) செய்பவர்.

விஜயலட்சுமியின் பரிதாப நிலையைப் பார்த்து வருந்தியவர், தன்னுடன் சென்னைக்கு வரும்படி அழைத்தார்.

பற்றுகோல் இல்லாமல் தவித்துக்கொண்டிருந்த விஜயலட்சுமிக்கு அது பெரும் ஆறுதாலாக இருந்தது.  அந்த உறவுக்காரப்பெண்ணுடன் ரயில் ஏறினாள். ஒப்பனை கலைஞர்களுக்கு உதவியாளராக ஆனாள்.

சொந்தமில்லை.. பந்தமில்லை… புரியாத மொழி, தெரியாத வேலை… ஆனாலும், விஜயலட்சுமிக்கு ஒரு நிம்மதி கிடைத்து. தான் யாருக்கு பாரமாக இல்லாமல், உழைத்து உண்ண முடிகிறது.

ஆனால்.. நாளடைவில் இங்கும் அவளுக்கு தொல்லைகள்.. ஆம்.. அதே ஆண்கள். எந்த நாடாக இருந்தால் என்ன.. நகரமாக இருந்தால் என்ன.. ஆண்கள் ஆண்கள்தானே!

எதிர்த்தும் உடன்பட்டும் புண்பட்டுப்போனாள் விஜயலட்சுமி. வேறு வழியில்லை.

அந்த நேரத்தில்தான்  பிரபல இயக்குநர் – கதாசிரியர் வினு சக்ரவர்த்தியின் பார்வையில் பட்டாள் விஜயலட்சுமி.

விஜயலட்சுமியின் அழகு.. குறிப்பாக அந்த பேசும்கண்கள்.. தான் எடுக்கும் வண்டிச்சக்கரம் படத்தில் உருவாக்கி வைத்திருக்கும் “சில்க்” என்ற கதாபாத்திரத்துக்கு அற்புதமாய் அமையும் என்று நினைத்தார்.

விஜயலட்சுமிக்கு ஸ்மிதா என்று புதிய பெயர் சூட்டப்பட்டது. அதோடு, “வண்டிச்சக்கரம்” படத்தின் கதாபாத்திரத்திரத்தின் சில்க் என்பதும் பெயருடன் சேர.. சில்க் ஸ்மிதா உருவானார்.

அதோடு அவர் நிற்கவில்லை. ஆங்கிலம் அவசியம் என்பதை ஸ்மிதாவுக்கு உணர்த்தி, ஆங்கிலம் கற்கவும் ஏற்பாடு செய்தார். தன் மனைவியையே ஸ்மிதாவுக்கு ஆங்கில ஆசிரியராக்கினார். இதற்கிடையே வேறு ஒருவரிடம் ஸ்மிதா நடனமும் கற்றுக்கொண்டார்.

வண்டிச்சக்கரம் படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. படத்தின் நாயகன் – சிவக்குமார். நாயகி  சரிதா. இவர்களுக்கு இணையாக பிரபலமானார் சில்க் ஸ்மிதா.

அவரது கண்கள் பேசுவதாகவும், பாடுவதாகவும்கூட  ஆசை ஆசையாய் பலரும் விமர்சித்தனர்.  அதோடு ஸ்மிதாவின் முகபாவங்களும், அங்க அசைவுகளும் தமிழக இளைஞர்களைக் கட்டிப்போட்டன.

சில்க் ஸ்மிதாவுக்கு அடுத்தடுத்த படங்கள் படபடவென ஒப்பந்தமாயின. பெரும் நடிகர்களின் படங்களாக இருந்தாலும் சில்க் ஸ்மிதாவின் ஒரு பாடல் இருப்பது  அவசியம் என்றானது.

“கேமரா இல்லாமல் கூட படம் எடுத்துவிடலாம். ஸ்மிதா இல்லாமல் படம் எடுக்க முடியாது” என்றது கோடம்பாக்கம்.

படத்தை வாங்கும் முன்பே, “ஸ்மிதாவின் ஒரு பாடல் அவசியம்” என்று உத்தரவு போட்டனர் விநியோகஸ்தர்கள்.

தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று பல்வேறு மொழிகளில் கால்பதித்தார் சில்க்ஸ்மிதா.

1980களில் ஸ்மிதா இல்லாமல் திரைத்துறை இல்லை என்ற நிலை ஏற்பட்டது.

அதே நேரம் கவர்ச்சி வேடங்களில் மட்டுல்ல.. தன்னால் குணச்சித்திர நடிப்பையும் வெளிக்காட்ட முடியும் என்பதை நிரூபித்தார் சில்க் ஸ்மிதா. அதற்கு உதாரணமாக அலைகள் ஓய்வதில்லை படத்தைச் சொல்லலாம்.

கற்பனையே செய்து பார்த்திராத அளவுக்கு பணம்,  புகழ்… ஆனாலும் தொல்லைகள் மட்டும் ஓயவில்லை. விஜயலட்சுமியாக இருந்தாலும் சில்க் ஸ்மிதாவாக இருந்தாலும்.. பெண்தானே!

இதற்கு ஒரு சம்பவத்தைச் சொல்வார்கள்…

பெரிய நடிகர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு. அவருடன் நடிக்கிறார் சில்க் ஸ்மிதா.

படப்பிடிப்பு நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் மிக சோகமாக இருக்கிறார். தனிமையில் யாருக்கும் தெரியாமல் அழுகிறார். ஆனாலும் கண்கள் காட்டிக்கொடுக்கின்றன.

இதைக் கவனித்த பெரிய நடிகர், படப்பிடிப்பின் இடைவேளையில், ஸ்மிதாவிடம் வந்து, “என்ன பிரச்சினை” என்கிறார்.

விரக்தியான மனநிலையில் இருந்த ஸ்மிதாவுக்கு, தன்னை நோக்கி வந்த ஆறுதலான கேள்வி  அத்தனை நெகிழ்ச்சியைக் கொடுத்தது.   “ஏன்தான் பிறந்தோமோன்னு இருக்கு.. தற்கொலை செய்துக்கலாம்னு தோணுது” என்றார் விசும்பலுடன்

சில விநாடி நிதானித்த அந்த பெரிய நடிகர், “தற்கொலை செஞ்சுக்கறதா இருந்தா என்கிட்ட ஒருவார்த்தை சொல்லிடு” என்கிறார்.

ஸ்மிதா புரியாமல் பார்க்க.. அந்த நடிகர், “அதுக்குள்ள நாம “சந்தேசமா” இருந்திடணும் ஒரு முறை” என்கிறார்.

இதைக்கேட்டு ஸ்மிதா ஓவென்று கதறி அழுதுவிட்டதாக சொல்வார்கள்.

இதிலிருந்தே அவரது சூழ்நிலையைப் புரிந்துகொள்ளலாம்.

இத்தனைக்கும் இடையே எவரும் எதிர்பாராத.. நினைக்க முடியாத ஒரு உள்ளம் சில்க் ஸ்மிதாவிடம் இருந்தது. பொதுவுடமை தத்துவத்தின் மீது நம்பிக்கையுள்ளவராக இருந்தார். “நடிக்க வராவிட்டால் நக்சலைட் ஆகியிருப்பேன்” ஒரு பேட்டியில் வெளிப்படையாக கூறினார்.

மக்களுக்காக உழைக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு அவர் நிறைய உதவிகள் செய்ததாக  தகவல்கள் வெளியானது உண்டு. அதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தைச் சொல்லலாம்.

தோழர் கேசவன் சிறுநீரக பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  சிகிச்சைக்கு நான்கு லட்ச ரூபாய் தேவை என்கிற நிலை. அதற்காக கம்யூனிஸ்ட் கட்சியின் நிதி திரட்டிக்கொண்டிருந்தார்கள். இதை ஒரு தோழர் மூலம் அறிந்த ஸ்மிதா, “நிதி ஏதும் திரட்ட வேண்டாம். ஒட்டுமொத்த மருத்துவ செலவையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்றார். அதன்படியே செய்தார்.

கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு மட்டுல்ல.. தன்னை நாடி வந்த பலருக்கும் அவர் உதவி செய்தார்.

அதே நேரம் அவரை மிகவும் கோபக்காரர்  என்றும்  சிலர் சொல்வது உண்டு. அதற்கான காரணத்தை சக நடிகையும் சில்க் ஸ்மிதாவின் நண்பருமான அனுராதா ஒரு முறை கூறினார்: “`சினிமாவில் பல ஹீரோ, ஹீரோயின்களை அதிக புகழை, தன் கிளாமர் டான்ஸால் சில்க் பெற்றார். ஆனா, அந்தப் புகழ் அவருக்கு அவ்வளவு ஈசியா கிடைச்சுடலை. சினிமா துறையினர் உட்பட பலராலும் பல விதத்துலயும் அவங்க நிறைய மனவேதனைகளை அனுபவிச்சாங்க.  அந்தப் படிப்பினைகளிலிருந்துதான், தன்னைக் கோபக்காரி மாதிரி வெளிப்படுத்திகிட்டாங்க” என்றார் அனுராதா.

திரைத்துறை வாழ்க்கை, தோழர்கள் மீது பரிவு, தேவையானவர்களுக்கு உதவி.. என்கிற நிலையெல்லாம் கடந்து, தனக்கென ஒரு ஜீவன் வேண்டும் என்கிற  உணர்வு எல்லோரையும் போலவே ஸ்மிதாவுக்கும் இருந்தது.

அப்படியோர் துணையும் அவருக்குக் கிடைத்தார். அந்த நபரை, “தாடிக்காரர்” என்றும் “டாக்டர்” என்றும் அப்போதைய பத்திரிகைகள் கிசுகிசுத்தன. “நடுத்தர வயதைக் கடந்த அந்த நபருக்கு ஏற்கெனவே குடும்பம் இருக்கிறது. இப்போது அவரும் ஸ்மிதாவும் சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசிக்கிறார்கள்” என்றும் எழுதப்பட்டது.

ஆனால் இது குறித்து ஸ்மிதா எதையும் பேசியதில்லை.

இந்த நிலையில்தான் 1996 ம் வருடம் செப்டம்பர் 23ம் தேதி.. தனக்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் பிணமாக தொங்கினார் சில்க்ஸ் ஸ்மிதா.

கடன், காதல் தோல்வி, மது, மனிலை… என்று அவரது மரணத்துக்கு காரணங்களாகச் சொல்லப்பட்டன ஆண்களால்.

எப்போதும்போல் இதற்கு பதிலேதும் சொல்லாமல் தூக்கில் ஆடிக்கொண்டிருந்தது ஸ்மிதாவின் உடல்.

இன்று டிசம்பர் 2… சில்க் ஸ்மிதா பிறந்தநாள்.  ஆனாலும் அவரது மரண நினைவுகளைத்தான் மனது அசைபோடுகிறது..என்ன செய்ய!

–    டி.வி.எஸ். சோமு

 

#Silk mitha  #birthday #lifehistory

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Silk Smitha : Golden girl melted by Male domination, சில்க் ஸ்மிதா: ஆணாதிக்கத்தால் உருகிய பொன்மேனி!
-=-