கோயம்புத்தூர்

விவசாயிகளுக்கு இலவசமாக அளிப்பதாக அறிவிக்கப்பட்ட வண்டல் மண் பெரு முதலாளிகளுக்கு அரசே சட்டவிரோதமாக விற்பனை செய்வதாக கோவை வாழ் மக்கள் கூறுகின்றனர்.

கோவை மாவட்டத்தில் சுமார் 1277 நீர்நிலைகள், அதாவது ஏரிகளும், குளங்களும் உள்ளன.  இவற்றை சுத்தம் செய்வதற்காக எடுக்கப்படும் வண்டல் மண் விவசாயிகளுக்கு இலவசமாக அளிக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.  ஆனால் கோவையை சுற்றியுள்ள தேவராயபுரம், பேரூர், பரமேஸ்வரபாளையம், தென்னூர் போன்ற பகுதிகளில் வண்டல் மண் சட்ட விரோதமாக பெரு முதலாளிகளுக்கு விற்கப்படுவதாக மக்கள் கலெக்டருக்கு புகார் மனு அளித்துள்ளனர்.

அந்த பகுதி வாழ் மக்கள் இதை வீடியோ படம் எடுத்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

இது பற்றி அந்த பகுதியில் வசிக்கும் ஆல் இந்தியா கிசான் சபா தலைவர் பழனிச்சாமி, “கடந்த 10 நாட்களில் மட்டும் நூற்றுக்கணக்கான லாரிகளில் வண்டல் மண் அன்னூர், பேரூர் பகுதிகளில் இருந்து அள்ளிச் செல்லப் படுகிறது.  அந்த வண்டல் மண்ணை எடுக்க கனரக உபகரணங்கள் பயன்படுத்தப் படுகின்றன. இது பற்றி மாவட்ட ஆட்சியாளருக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  அரசு ஆணைப்படி காலை 9 மணி முதல் 6 மணி வரையே மண் எடுக்கப்பட வேண்டும்.  ஆனால் இங்கோ இரவும் பகலும் அள்ளப்படுகின்றன” என கூறினார்.

மேலும், “அரசு இதற்காக இங்கு வாழும் மக்களைக் கொண்டு ஒரு குழு அமைத்து இதை கண்காணிக்க வேண்டும்.  இந்த வண்டல் மண் பெரு முதலாளிகளுக்கு விற்கப்படுவதை தடுத்து, இங்குள்ள விவசாயிகளுக்கு அளிக்க வேண்டும்” என பழனிச்சாமி தெரிவித்தார்.

இந்த நேரத்தில் வாசகர்களின் நினைவுக்காக இது

.

கடந்த திங்கள்  சட்டசபையில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தங்கள் கட்சிகள் தான் நீர்நிலைகளைக் காப்பதாக மாறி மாறி சொல்லிக் கொண்டன.

திமுக செயல் தலைவர் மு க ஸ்டாலின் ஏற்கனவே தனது கட்சி தமிழ்நாட்டின் அனைத்து ஏரி, மற்றும் குளங்களில் தூர் வாரும் என அறிவித்திருந்தார்.  மேலும் தனது கட்சியின் 89 சட்டமன்ற உறுப்பினரும் இதை தலைமை தாங்கி நடத்துவார் எனவும் தெரிவித்திருந்தார்.  இந்த அரசு குடிநீர் ஆதாரங்களைப் பற்றிக் கவலைப் படுவதில்லை எனவும் தெரிவித்தார்.

அரசும் தன் பங்குக்கு, 14959 நீர்நிலைகள் தூர் வாரப்பட்டுள்ளதாகவும், 1,66,45,260 கன அடி வண்டல் மண் எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் உதயகுமார் மூலமாக சட்டசபையில் அறிவித்தது.