திருப்பதிகோவில் நகைகள் காணாமல் போனது குறித்து தேவஸ்தானம் பதில் கூற வேண்டும்! ஆந்திர பாஜக போர்க்கொடி

திருப்பதி:

திருப்பதி கோவில் நகைகள் காணாமல் போனது குறித்து தேவஸ்தானம் பதில் தெரிவிக்க வேண்டும் ஆந்திர பாஜக தலைவர் போர்க்கொடித் தூக்கி உள்ளார்.

திருப்பதி ஏழுமலையானுக்கு சொந்தமான வெள்ளிக்கிரிடம் உள்பட சில நகைகள் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திர மாநில பாஜக தலைவர் பானுபிரகாஷ் , இது குறித்து  காவல்துறையில் புகார் கொடுக்க வேண்டும் என்றும், கோவில் நகை திருட்டில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட உடனடியாக நீதி விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்து பேசியவர், நகைகள் காணாமல் போன விஷயத்தில் திருப்பதி தேவஸ்தானம் பதில் அளிக்க வேண்டும் என்றும், தனிநபர் மீது பழி சுமத்தி தப்பிப்பது நியாயமில்லை என்றும் குறைகூறி உள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் ஏராளமான குவிந்து வரும் நிலையில், அவை அனைத்தும் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்த 5 கிலோகிராம் தங்க நகைகள் மற்றும்  வெள்ளிக்கிரிடம் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஊழியர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், அந்த ஊழியரோ, தான்  தான் நகையை திருடவில்லை என மறுத்து வருகிறார்.

இந்த விவகாரம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.