Random image

உங்களால் எங்களுக்கு எப்பவுமே கஷ்டம் மட்டும் தான்: சிம்பு ரசிகர்கள் கவலை

மாநாடு திரைப்படத்தில் இருந்து நடிகர் சிம்பு அதிரடியாக நீக்கப்பட்டிருப்பது, அவரது ரசிகர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, பல்வேறு புலம்பல்களும் சமூக வலைதளத்தில் பரவ காரணமாகியிருக்கிறது.

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கும் திரைப்படம் மாநாடு. இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக சிம்பு சில மாதங்களுக்கு முன்பு ஒப்பந்தம் செய்யப்பட்டு, வெளிநாட்டில் ஷூட்டிங் பணிகள் தொடங்கியிருந்தது. இத்தகைய சூழலில், இன்று இப்படத்திலிருந்து நடிகர் சிம்பு அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தன்னை வைத்து மாநாடு படத்தை எடுக்க என்னை தூண்டி, துணை நின்ற நண்பன் சிம்புவுக்கு முதலில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால் காலமும், நேரமும் கடந்துக்கொண்டே போவது நாளை கசப்பாக மாறிவிடக் கூடாது. எதையும் உரிய நேரத்தில் திட்டமிட்ட படி செய்கிறவன், அந்த தயாரிப்புக்கு நேர்மையோடு இருக்கிறான் என்று நம்புகிறவன் நான். ஆனால் எவ்வளவோ இழுத்துப் பிடித்தும் கால விரயம் தான் நிகழ்ந்ததே தவிர, படம் தொடங்கவே இல்லை.

அதனால் சிம்பு நடிக்க இருந்த மாநாடு படத்தினை கைவிடுவதை தவிர்க்க இயலவில்லை. சிம்புவின் அன்பும், நட்பும் தொடரும். இதுவரை என் மீது அன்பு செலுத்திய அவரின் ரசிகர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. பத்திரிக்கையாளர்கள் அவ்வளவு துணை நின்றார்கள். எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். வெங்கட் பிரபு இயக்க மாநாடு படம், எனது தயாரிப்பில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும். விரைவில் அந்த அறிவிப்பு வரும். அனைவருக்கும் நன்றியும் அன்பும் !!!” என்று தெரிவித்திருந்தார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் இந்த அறிவிப்பால் கடுமையாக துவண்டுபோன சிம்பு ரசிகர்கள், சோகத்தில் சமூக வலைதளங்களில் புலம்பி வருகின்றனர். இது தொடர்பாக ஹரிஹரன் கஜேந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில், “சிம்புவை வீழ்த்தி, அவரிடமிருந்து எல்லாவற்றையும் பறிக்க வேண்டும் என்று விரும்பினார்கள். அதில் தோல்வியுற்றார்கள். இப்போது அவரை குறைத்து மதிப்பிட்டு காட்டி, அவரிடமிருந்து ரசிகர்களை பிரித்து, சிம்புவை கீழே கொண்டு வர முயற்சிக்கிறார்கள். ஆனால் எங்களை போன்ற சிம்பு ரசிகர்கள் உணர்ச்சிவசப்படுவார்களே தவிற, விசுவாசமற்றவர்களாக இருக்கமாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

ஹரிஹரன் கஜேந்திரனின் இந்த பதிவுக்கு பதில் அளித்துள்ள சிம்பு ரசிகரான ராஜா, “இது தான் ரசிகர்களின் தற்போதைய நிலை. உங்களுக்கு எங்களுடைய வலி புரியவில்லை. நீங்கள் சர்வ சாதாரனமாக படத்தை கைவிடுவதாக அறிவித்துவிட்டீர்கள். ஆனால் நாங்கள் உங்களுடைய படம் பற்றி கனவு கண்டுக்கொண்டு இருக்கிறோம். எப்போதுமே எங்களை காயப்படுத்துகிறீர்கள்” என்று தெரிவித்ததோடு, தான் பேசிய வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/rajstr686/status/1159436722729390080?s=08

ராஜாவின் இந்த ட்வீட்டிற்கு பதில் அளித்து வரும் இதர நடிகர்களின் ரசிகர்கள், “சிம்பு இவற்றை எல்லாம் பார்க்க வேண்டும். ரசிகர்கள் படும் மன வேதனைகளை புரிந்துக்கொண்டு, அவர் படங்களில் கவனம் செலுத்த வேண்டும். சிம்பு தனது பணிக்கு கடமையுள்ளவராக இருக்கவேண்டும். அது தனக்காக இல்லாவிட்டாலும், தனது ரசிகருக்காகவாவது இருக்க வேண்டும்” என்று தெரிவித்து வருகின்றனர்.

மாநாடு படத்திலிருந்து சிம்பு நீக்கப்பட்டது, அவரது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அதே நேரம், எப்போதுமே தங்களுக்கு சிம்பு கஷ்டத்தை மட்டுமே கொடுத்து வருவதாக அவர்களை புலம்பவும் வைத்துள்ளது. அதேநேரம், இவற்றை சிம்பு கண்டு, இனியாவது ரசிகர்களின் மன வேதனைகளுக்கு, பதில் கொடுக்கும் வகையில் படங்களில் அவர் நடிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.