கன்னடத்தில் சிவராஜ் குமார்- ஸ்ரீ முரளி இணைந்து நடித்த ‘முப்தி’ படத்தை தமிழில் ‘ரீ- மேக்’ செய்யும் உரிமையை பெற்றுள்ள ஞானவேல் ராஜா, சிலம்பரசனை கதாநாயகனாக வைத்து கடந்த ஆண்டு இந்த படத்தை ஆரம்பித்தார்.

பெல்லாரியில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் ஞானவேல் ராஜாவுக்கும், சிலம்பரசனுக்கும் பிரச்சினை உருவானது. சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கும் அளவுக்கு விவகாரம் பெரிதானது.

கன்னட படத்தை இயக்கிய நாதன், இந்த படத்தின் சில காட்சிகளை டைரக்ட் செய்து இருந்தார். சிலம்பரசனுடன் சமாதானம் ஏற்பட்டுள்ள நிலையில், கை விடப்பட்ட இந்த படத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளார், ஞானவேல்.

சிலம்பரசனுடன், இன்னொரு கதாநாயகனாக கவுதம் கார்த்திக் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

டி.ஆர்.மகனும், கார்த்திக் மகனும் ஜோடி சேரும் இந்த படத்தை ‘ஜில்லுனு ஒரு காதல்’ படத்தை டைரக்ட் செய்த கிருஷ்ணா, இயக்குகிறார். இரு நாயகர்களுக்கான நாயகி வேட்டையில் படக்குழு ஈடுபட்டுள்ளது.

சிலம்பரசன் இப்போது ‘மாநாடு’ படத்தில் பிஸியாக இருக்கிறார். இதன் ஷுட்டிங் முடிந்ததும், ‘முப்தி’ தமிழ் ஆரம்பமாகும்.

– பா. பாரதி