சிம்புவின் “மாநாடு”! : அரசியலில் அடியெடுத்து வைக்கிறார் சிம்பு?

ஒருபுறம் “பீப்” பாடல், ஓப்பன் கிஸ், படப்பிடிப்புக்கு டிமிக்கி என்று சர்ச்சையில் சிக்கி வந்தாலும், இன்னொரு புறம் பொது விசயங்களில் அக்கறை காட்டுபவர்தான் சிம்பு.

ஜல்லிக்கட்டுக்காக தனது வீட்டில் போராட்டம், காவிரி பிரச்சினை தீர கர்நாடக மக்கள் தமிழக மக்களுக்கு தலா ஒரு டம்ளர் தண்ணீர் தரவேண்டும் என்ற புரட்சி கருத்து என அதகளப்படுத்தியவர்தான் சிம்பு.

அப்பா டி.ராஜேந்தர் தனிக்கட்சியே நடத்தும்போது, லிட்டில் சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு வராமலா இருப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால் அப்பாவுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்ததோடு இருந்தார் சிம்பு.

இந்த நிலையில் தீவிர அரசியலில் இறங்க திட்டமிட்டுவிட்டாரோ என்று தோன்றுகிற வகையில் சிம்புவின் அடுத்தப்பட தலைப்பு வெளியாகி இருக்கிறது.

அது – மாநாடு.

படத்தின் கேப்சனும் மிரட்டுகிறது:

“உண்மைக்காக துணிந்து நில்.  அதனால் நீ தனியாக நிற்க நேர்ந்தாலும்…”

(தமிழ்நாட்டில் தமிழத்திரைப்படம், தமிழகத்தில் அரசியல்.. எல்லாம் சரி, கேப்சனை எல்லோருக்கும் புரியறமாதிரி தமிழ்ல போட்டா என்னப்பா!)

இந்தப் படம் குறித்து கோலிவுட் வட்டாரத்தில் உற்சாகமாகவே பேசிக்கொள்கிறார்கள்.

சுரேஷ்காமாட்சி என்ற தரமான இயக்குநர் + தயாரிப்பாளர் உருவாக்கும்படம். ஜனரஞ்சக வெங்கட் பிரபுவின் இயக்கம். எல்லாவற்றுக்கும் மேலாக.. புத்துணர்ச்சியுடன் புது மனிதராக நடிக்க வந்திருக்கிறார் சிம்பு” என்கிறார்கள்.

அதாவது, “திறமை மிக்க நடிகராக இருந்தாலும், பன்முக திறமை பெற்றிருந்தாலும் சில பழக்கவழக்கங்களால் சிம்புவை பலரும் ஒதுக்கினர். சமீபகாலமாக தனது குறைகளை சுயபரிசோதனை செய்த சிம்பு, தற்போது புது மனிதராக உற்சாகமாக களம் இறங்கியிருக்கிறார். ஆகவே மாநாடு குறித்த காலத்தில் வெளியாகி பெரு வெற்றி பெறும்” என்கிறார்கள்.

இன்னொரு பக்கம், “சிம்வுன் திரைவாழ்வில் மட்டுமல்ல.. அரசியலுக்கு துவக்கமாகவும் இந்தத் திரைப்படம் இருக்கும். படத்தில் அவருக்கு அவ்வளவு பவர்புல் கேரக்டர்”  என்று ஒரு பேச்சு உலவுகிறது.