சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரேமாதிரியான காயங்கள்..!

மதுரை: உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விபரங்களின்படி, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கிட்டத்தட்ட 12 பேர் காவல் துறையினரின் தாக்குதலுக்கு இலக்கான விபரங்கள் வெளியாகியுள்ளன.

மேலும், அப்படி தாக்குதலுக்கு இலக்கானவர்களுக்கு ஏற்பட்ட காயங்களில் ஒற்றுமை இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், அதே காவல்நிலையத்தின் காவல் அதிகாரிகள், 28 வயதான ஒருவர் கஸ்டடியில் இறந்தது குறித்த வழக்கையும் எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சாத்தான்குளத்திலிருந்து 40 கி.மீ. தொலைவிலுள்ள ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் தான் மோசமாக தாக்கப்பட்டதாக முன்வந்து புகாரளித்துள்ளார் 33 வயதான ஆட்டோ டிரைவர் ஒருவர். இந்த தாக்குதலால், தான் டயாலிசிஸ் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சாத்தான்குளத்தில், பொதுவாக, அங்குள்ள காவல் அதிகாரிகள், சிக்கும் நபர்களின் பின்புறத்திலேயே தாக்குவதாகவும், ஆழமான காயங்களை ஏற்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது. அதற்கேற்ற கருவிகளை தேர்ந்தெடுத்து தாக்கியதாகவும் தெரியவந்துள்ளது.

அந்தக் காயங்களுக்கு உடனடியாக சிகிச்சையளிக்காவிட்டால், அதில் தொற்று ஏற்பட்டுவிடும் அளவிற்கு மோசமானது என்று தெரிவிக்கின்றனர்.