டில்லி,

பாஸ்போர்ட்டுகளை எளிய முறையில் தாமதமின்றி எடுக்க பல முக்கிய அம்சங்களை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.

பாஸ்போர்ட் பெறுவதற்கான 6 வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

1. பிறப்புச் சான்றிதழ் பழைய விதிமுறையின்படி, 1989ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதிக்குப் பிறகு பிறந்த எவர் ஒருவரும் பாஸ்போர்ட் பெற பிறப்புச் சான்றிதழை அளிக்க வேண்டியது கட்டாயமாக இருந்தது.

ஆனால், தற்போதைய விதிமுறையின்படி, பிறந்த தேதி குறிப்பிடப்பட்டிருக்கும் எந்த ஒரு சான்றிதழையும் பிறப்பு சான்றிதழாக அளிக்கலாம்.

அதாவது, பிறப்புச் சான்றிதழ் பள்ளியின் மாற்றுச் சான்றிதழ் பான் அட்டை ஆதார் அல்லது இ-ஆதார் அட்டை அரசு ஊழியராக இருந்தால் அடையாள அட்டை அல்லது ஓய்வூதியதாரராக இருந்தால் ஓய்வூதிய சான்றிதழ். ஓட்டுநர் உரிமம் வாக்காளர் அடையாள அட்டை பொது துறையைச் சேர்ந்த காப்பீட்டு நிறுவனம் அளித்த காப்பீட்டு ஆவணம் இவற்றில் ஏதேனும் ஒன்றை பிறப்புச் சான்றிதழுக்கு மாற்றாக அளிக்கலாம்.

2. பெற்றோர் அல்லது பாதுகாவலர் பாஸ்போர்ட் பெறும் விதிமுறையில் ஒரு வரவேற்கத்தக்க மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஒருவர் பாஸ்போர்ட் பெற தாய் – தந்தை என இரண்டு பேரின் பெயர்களையும் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும் என்ற விதி மாற்றப்பட்டு, தற்போது, பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஒருவரின் பெயர் மட்டும் பதிவு செய்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், பெற்றோரில் ஒரே ஒருவர் மட்டுமே இருக்கும் குழந்தைகளும், ஆதரவற்ற வர்களும் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பது எளிதாகியுள்ளது.

இதில், மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், மத அடிப்படையில் பார்த்தால், சாதுக்கள், சன்னியாசிகள் போன்றவர்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் போது பெற்றோர் என்ற இடத்தில் தங்களது ஆன்மிகக் குருவின் பெயரைக் கூட பதிவு செய்து கொள்ளலாம் என்பதே.

3. இணைக்கப்படும் சான்றிதழ்கள் விண்ணப்பத்தில் பின் இணைப்புகள் 15ல் இருந்து 9 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவத்தில் இதுவரைக் கேட்கப்பட்ட பின் சேர்க்கையான சான்றிதழ் இணைப்புகள் ஏ, சி, டி, இ, ஜே மற்றும் கே ஆகியவை முற்றிலும் நீக்கப்பட்டுவிட்டன. சில சான்றிதழ்கள் மற்றவற்றோடு சேர்க்கப்பட்டுவிட்டது.

இதன் மூலம் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க ஏராளமான சான்றிதழ்களை இணைக்கும் பணி எளிமையாகியுள்ளது.

4. அட்டஸ்டேஷன் இதுவரை விண்ணப்பதாரர்கள் இணைக்கும் சான்றிதழ்களுக்கு நோட்டரி அல்லது தனி நீதிபதி அல்லது முதன்மை குற்றவியல் நீதிபதியின் அட்டஸ்டேஷன் அவசியமாக இருந்தது.

ஆனால், இனி விண்ணப்பதாரரே வெள்ளை காகிதத்தில் தன்னுடைய கையொப்பம் இட்டு கொடுத்தால் போதுமானதாகிறது. இதன் மூலம் அட்டஸ்டேஷனுக்காக அலையும் வேலை மிச்சமாகிறது.

5. திருமணமானவர் / விவாகரத்தானவர் திருமணமானவர் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்கும் போது திருமண சான்றிதழை இணைக்க வேண்டியது இதுவரை கட்டாயமாக இருந்தது. ஆனால், விண்ணப்பத்தில் பின் சேர்க்கையாக இதுவரை இணைத்து வந்த திருமண சான்றிதழ் இனி தேவையில்லை.

ஒருவேளை விவாகரத்தானவர் என்றால், அவர் தனது வாழ்க்கைத் துணையின் பெயரைக் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என்ற விதிமுறை மாற்றம் வரவேற்கத்தக்கதாக அமைந்துள்ளது.

6. பணித் தொடர்பாக துரித பாஸ்போர்ட் ஒரு அரசு ஊழியருக்கு துரிதமாக பாஸ்போர்ட் பெற வேண்டும் என்றால், தனது மேலதிகாரியிடம் இருந்து வெளிநாடு செல்ல தடையில்லாச் சான்று  NOC (no objection certificate) பெற்று அளிக்க முடியாவிட்டால், தன்னுடைய மேலதிகாரிக்கு தனது வெளிநாட்டுப் பயணம் குறித்து அறிவித்துவிட்டதாக, விண்ணப்பதாரரே சுய பிரகடன சான்றிதழை கையெழுத்திட்டுத் தரலாம்.

இந்த  புதிய விதிமுறை மாற்றங்கள், பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிப்பதற்கான வேலையை மிகவும் எளிமையாக்கியதோடு, பல்வேறு சட்டச் சிக்கல்களையும் தீர்த்து வைத்துள்ளது என்றே சொல்லலாம்.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் புதிய விதிமுறைகள் குறித்து, அதன் இணையதளத்திலும் விரிவாக தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

https://portal2.passportindia.gov.in/AppOnlineProject/user/RegistrationBaseAction?request_locale=en