மாஸ்டர்ஸ் பேட்மின்டனில் கோப்பை கனவு கலைந்தது – சிந்து, சாய்னா தோல்வி!

கோலாலம்பூர்: மலேசியாவில் நடந்துவரும் மாஸ்டர்ஸ் பேட்மின்டன் தொடரில் கோப்பை வெல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீராங்கனைகள் சிந்து மற்றும் சாய்னா ஆகியோர் காலிறுதியுடன் வெளியேறிவிட்டனர்.

மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மின்டன் தொடர் மகளிர் ஒற்றையர் பிரிவில் பங்கேற்றனர். இருவரும் சுற்றுப் போட்டிகளில் வென்று காலிறுதிக்கு முன்னேறினர்.

எனவே, இவர்கள் கோப்பை வெல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது. உலக சாம்பியன் சிந்து, தன்னை எதிர்த்து மோதிய சீனதைபே நாட்டின் டை சூ விடம் 16-21 மற்றும் 16-21 என்ற செட் கணக்கில் வீழ்ந்து கோப்பை வாய்ப்பை இழந்தார்.

மற்றொரு காலிறுதியில் ஸ்பெயின் நாட்டின் கரோலினா மரினுடன் மோதினார் சாய்னா நேவால். அதில் 8-21 மற்றும் 7-21 என்ற மோசமான தோல்வியை பதிவுசெய்தார்.

இவர்கள் இருவருடைய தோல்விகளின் மூலம், இத்தொடரில் இந்திய பேட்மின்டன் நட்சத்திரங்கள் பங்குபெறுவது முடிவுக்கு வந்துள்ளது.