புதுடெல்லி: டென்மார்க்கில் நடைபெறவுள்ள தாமஸ் மற்றும் உபெர் கோப்பை பாட்மின்டன் போட்டிகளில், 20 பேர் கொண்ட இந்திய அணியை தற்போதைய உலகச் சாம்பியன் பி.வி.சிந்து மற்றும் முன்னாள் உலக நம்பர்-1 வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் வழிநடத்துவர் என்று அறிவித்துள்ளது இந்திய பாட்மின்டன் சங்கம்.

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற சாய் பிரனீத் முழங்கால் காயம் காரணமாக விலகியதால், ஸ்ரீகாந்தும், கடந்த 2014ம் ஆண்டு காமன்வெல்த் சாம்பியனான பாருபல்லி கஷ்யபும், லக்சயா சென்னும் இந்திய அணியை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுள்ளனர்.

கிருஷ்ண பிரசாத் கராகா, துருவ் கபிலா மற்றும் எம்ஆர் அர்ஜுன் ஆகிய இரட்டையர் ஸ்பெஷலிஸ்ட் வீரர்களுடன், அனுபவமற்ற மனு ஆத்ரி, பி.சுமீத் ரெட்டி உள்ளிட்டோரும் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இந்திய பெண்கள் அணியை, சிந்து வழிநடத்திச் செல்கிறார். இந்திய அணியில், முன்னாள் உலக நம்பர்-1 சாய்னா நேவால், காமன்வெல்த் வெண்கல வீராங்கனை அஷ்வினி பொன்னப்பா மற்றும் சிக்கி ரெட்டி ஆகியோரும் இணைந்துள்ளனர். மேலும், இளையோர்களான ஆகர்ஷி கஷ்யப் மற்றும் மால்விகா பன்சோட் போன்றோரும் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணி தயாராகியுள்ள நிலையில், இக்கோப்பையை மொத்தம் 14 முறை வென்ற சீனா, தான் பங்கேற்பதை இன்னும் உறுதிசெய்யவில்லை என்று கூறப்படுகிறது.