சிநேகன் “பாடிய” ஜெயலலிதா பாட்டு…. சசிகலாவுக்கு எதிரானதா?: வெடிக்கும் சர்ச்சை

--

முதல்வர் ஜெயலலிதா, உடல் நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவ மனையில் சேர்ந்ததில் இருந்து, பலவித வதந்திகளும், யூகங்களும் கிளம்பியபடியே இருக்கின்றன. அவரது உடல் நலன் குறித்து அதிர்ச்சி அளிக்கக்கூடிய வதந்திகள் அவ்வப்போது எழுந்து அடங்குகின்றன.

ஜெயலலிதா - சசிகலா
ஜெயலலிதா – சசிகலா

அவர் நலமுடன் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தும்படியாக, அவரது தற்போதைய புகைப்படத்தையாவது வெளியிட வேண்டும் என்று தி.மு.க தலைவர் கருணாநிதி உட்பட பலரும் வலியுறுத்தினார்கள். இன்னொரு புறம், அதுபோல புகைப்படம் கேட்பது தவறு என்ற குரல்களும் ஒலிக்கின்றன.

ஜெயலலிதாவைச் சந்திக்க வந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கவர்னர் வித்யாசாகர்ராவ் ஆகியோரும் மருத்துவர்களை மட்டுமே சந்தித்துச் சென்றதாகவும் தகவல்கள் பரவியிருக்கின்றன.

இதற்கிடையே, “ஜெயலலிதா உடல்நலம் இல்லாத சூழலை பயன்படுத்தி கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக கொண்டுவந்திருக்கிறார் சசிகலா” என்று ஆங்கில ஏடு ஒன்றில் கட்டுரை வெளியானது. அதே நேரம், “சசிகலவுக்கு அவரது உறவினர்கள் மத்தியிலும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது” என்றும் ஒரு ஆங்கில நாளேடு எழுதியது.

இந்த நிலையில், அ.தி.மு.க. ஆதரவாளராக முகம் காட்டும், சினிமா பாடலாசிரியர் சிநேகன், ஜெயலலிதா குறித்து உருக்கமாக (பாடல் போல்) பேசி, தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். வைரலாக பரவி வரும் இந்த வீடியோவும் இப்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

இது குறித்துச் சொல்பவர்கள் கூறும் கருத்து இதுதான்:

சிநேகன்
சிநேகன்

“அம்மா…  என்னமா ஆச்சு உங்களுக்கு…” என்று ஆரம்பித்து,  மிகவும் உருக்கத்துடன் பேசியிருக்கிறார்.

“கண்ணுறங்க  நேரமின்றி கணப்பொழுதும் உழைச்சிங்க….

எங்க தேவை என்னான்னு கேட்காமலே செஞ்சிங்க….” என்று  உருக்கமாக  சிநேகன் பேசியதைக் கேட்கும்போது நெகிழ்வாகத்தான் இருக்கிறது.

ஆனால் அதில் இடையில் வரும் சில வரிகள், சின்னம்மாவை (சசிகலா) குற்றம்சாட்டுவதாக இருக்கின்றன என்பதுதான் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

“துஷ்டர்கள் கூட்டத்தை தூசிபோல கடந்திங்க…” என்று ஒரு வரி. போகட்டும்..  இது “அம்மா”வின் அரசியல் எதிரிகளைச் சாடுவதாக இருப்பதாகவைத்துக்கொள்ளலாம்.

ஆனால், அடுத்ததாக, “ நன்றி கெட்ட உலகந்தான்  நக்கலா சிரிக்குதும்மா…

ஒவ்வொரு நாளிகையும் உதிரந்தான் கொதிக்குதும்மா…” என்ற வரிகள் வருகின்றன.

அதாவது, “அம்மா”வால் பயன்பெற்றவர்களை, சாடுகின்றன இந்த வரிகள். ஜெ.வால் ஆகப்பெரும் பலன்கள் அடைந்தது சின்னம்மா (சசிகலா)வின் உறவுகள்தான் என்பது உலகறிந்த விசயம். அவர்களைத்தான் சிநேகன் சொல்கிறார். அதாவது, “அம்மா” உடல் நலம் இல்லாத நிலையை நினைத்து சின்னம்மாவை சாரந்தவர்கள் நக்கலாக சிரிப்பதாக சொல்வது போல் இருக்கின்றன அந்த வரிகள்.

சிநேகனின் முகநூல் உருக்கப்பதிவு
சிநேகனின் முகநூல் உருக்கப்பதிவு

இன்றுவரை எந்த ஒரு சூழ்நிலையிலும் “அம்மா”வின் சுக துக்கங்களில்  பங்கேற்கும் உடன் பிறவா சகோதரியாக இருப்பவர் சசிகலா. ஆனால், சிநேகனோ, “ ஆறுதலா ஒரு வார்த்தை சொல்ல இங்க யாரும் இல்ல…” என்று பேசியிருக்கிறார்.

இன்னொரு விசயம்…  தாய் என்பவருக்கு நிகராக யாரும் இருக்கமுடியாதுதான். “அம்மா”வுக்கும் அப்படித்தான். ஆனால், தன் உயிரைவிட மேலாக ஜெயலலிதாவை நினைத்து அவருக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறார் சசிகாலா. ஆனால் சிநேகனோ, “தலைக்கோதி தட்டித்தர சந்தியா அம்மா இல்ல…” என்று வார்த்தைகளில் வளையங்களை போட்டு பேசியிருக்கிறார்” என்று சொல்கிறார்கள், சிநேகனின் “அம்மா பாட்டில்” குற்றம் கண்டு பிடிப்பவர்கள்.

இது குறித்து சிநேகனின் கருத்தை அறிய அவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு  தகவல் அனுப்பினோம். பதில் இல்லை. அடுத்த முயற்சியாக அவரது எண்ணில் தொடர்புகொண்டோம். “உன்னை அறிந்தால்.. நீ உன்னை அறிந்தால்” என்ற பாடல் ஒலித்துக்கொண்டே இருந்ததே தவிர நமது அழைப்பை ஏற்கவில்லை. தொடர்ந்து நாம் அழைத்தும், ஏனோ கட் செய்தார்.

சிநேகன் தனது தரப்பை தெரிவித்தால் பிரசுரிக்க தயாராக இருக்கிறோம்.