Random image

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட திரைப்படத்துக்கு சிங்கப்பூர் அரசு தணிக்கைச்சான்று வழங்கியது!

மிழகத்தில் தடை செய்யப்பட்ட மெரினா புரட்சி திரைப்படத்துக்கு சிங்கப்பூர் அரசு தணிக்கைச்சான்று வழங்கியுள்ளது.

கடந்த 2017ம் வருடம் ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழகம் மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழர்கள் தன்னெழுச்சியாக  எட்டு நாட்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.

இந்த போராட்டத்தை அடிப்படையாக கொண்டு ‘மெரினா புரட்சி’ திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை சேரனிடம் உதவி இயக்குநராக இருந்து ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆன சண்முகராஜ் இயக்கியுள்ளார்.

ஆனால் 80 நாட்களாகியும் இப்படத்துக்கு இந்திய  தணிக்கை துறை சான்றிதழ் அளிக்க மறுத்துவருகிறது.  காரணம் சொல்லாமல் 2 முறை நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் மெரினா புரட்சி படத்தை சிங்கப்பூரில் வெளியிட அந்நாட்டு அரசு தணிக்கைச் சான்றிதழ் அளித்துள்ளது.

இது குறித்து படத்தின் இயக்குநர் சண்முகராஜ் தெரிவித்ததாவது:

“வரலாற்றுச் சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னணியில் இருக்கும் உண்மைகளை விளக்கும் படம்  மெரினா புரட்சி. இப்படத்துக்கு இந்திய தணிக்கைத்துறை சான்றிதழ் அளிக்க மறுத்து வருகிறது. இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம்.

மெரினா புரட்சி திரைப்படத்தை பொங்கலுக்குள் தணிக்கை முடித்து திரையிட வேண்டும் என்று கோரியிருக்கிறோம். மாண்புமிகு நீதியரசர் அவர்கள் எதிர்த்தரப்பான தணிக்கைத் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்கள்.

இந்த நிலையில் சிங்கப்பூர் அரசு மெரினா புரட்சி திரைப்படத்திற்கு தணிக்கை சான்று அளித்திருக்கிறது. அந்நாட்டு  அரசின் தணிக்கை பிரிவான Info communications Media Devolpment Authorities மெரினா புரட்சி திரைப்படத்திற்கு NC 16 என்ற பிரிவின் கீழ் ” தமிழகளின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தின் உண்மைகளை சொல்லும் படம்” என்று குறிப்பிட்டிருக்கிறது.

உலகெங்கிலுமுள்ள தமிழர்களிடம் மெரினா புரட்சியை கொண்டு சேர்க்கும் நாச்சியாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் போராட்டத்திற்கு சிங்கப்பூர் அரசின் தணிக்கை சான்று மேலும் வலு சேர்த்திருக்கிறது” என்று இயக்குநர் சண்முகராஜ் தெரிவித்துள்ளார்.