அடுத்த மாதம் பொதுத்தேர்தல் – ‘ஷாக்’ அறிவிப்பை வெளியிட்ட சிங்கப்பூர் பிரதமர்!

சிங்கப்பூரில் அடுத்த மாதம்(ஜூலை) 10ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று அறிவித்துள்ளார் அந்நாட்டு பிரதமர் லீ ஹியன் லூங்.

அவரின் இந்த அறிவிப்பை ‘சந்தர்ப்பவாதம்’ என்று விமர்சித்துள்ளன அந்நாட்டு எதிர்க்கட்சிகள் மற்றும் வலதுசாரி குழுக்கள்.

உண்மையில், அந்நாட்டில் பொதுத்தேர்தல் நடைபெற வேண்டிய காலகட்டம் 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆகும். ஆனால், நாடு எதிர்நோக்கியுள்ள சமூக மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்கு மக்களின் புதிய தீர்ப்பு வேண்டுமென்று கூறியுள்ளார் அந்நாட்டு பிரதமர்.

அவர் கூறியதாவது, “கொரோனா தொற்றுப் பரவல் எப்போது நிற்கும் என்பது தெரியாது. ஆசிய அளவில் எடுத்துக்கொண்டால், சிங்கப்பூரில் வைரஸ் தொற்றின் அளவு மிக அதிகமாக உள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களின் தங்குமிடங்கள் இதற்கு முக்கிய காரணம்.

தேர்தல் பாதுகாப்பான முறையில் நடைபெறும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

தேர்தலைப் பாதுகாப்பான முறையில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை அந்நாட்டு அதிகாரிகள் செய்து வருவதாகவும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமைப்படுத்தலில் இருப்பவர்களாக இருந்தாலும், ஓட்டுகளை தபாலில் அனுப்புவது அனுமதிக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் தொடர்பான ஊர்வலங்களுக்கும், இந்த நெருக்கடியான நேரத்தில் அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.