நலமுடன் இருக்கிறார் இசைக்குயில் லதா மங்கேஷ்கர்! உறவினர்கள் தகவல்! ரசிகர்கள் மகிழ்ச்சி

மும்பை: பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் நலமுடன் இருக்கிறார் என்று அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
பாலிவுட் திரையுலகின் புகழ்பெற்ற பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர். உடல்நல கோளாறால் பாதிக்கப்பட்ட அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.


இதையடுத்து, மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலை குறித்து பல்வேறு விதமான தகவல்கள் இணையத்தில் உலவின.
அதனால், அவரது ரசிர்கள் கவலை அடைந்தனர். இந்நிலையில் அவர் நலமுடன் இருக்கிறார் என்று அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.


இது குறித்து அவர்கள் கூறி இருப்பதாவது: லதா மங்கேஷ்கர் நலமுடன் உள்ளார். உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுகிறது. உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளுக்கு நன்றி. அவர் விரைவில் வீடு திரும்புவார் என்பதற்காக காத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கர் 20க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ளார். ரசிகர்களால் இசைக்குயில் என செல்லமாக அவர் அழைக்கப்படுகிறார்.