லடாக் எல்லை விவகாரம்: விளைவுகளை உணர்ந்து பேச வேண்டுமென மோடிக்கு மன்மோகன் அறிவுரை

--

புதுடெல்லி:
சீன விவகாரம் குறித்த பிரதமரின் தவறான தகவல்கள், தலைமைக்கு அழகல்ல அது ராஜதந்திரமும் அல்ல என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விமர்சித்துள்ளார்.

இந்தோ- சீனா எல்லை கல்வான் பள்ளத்தாக்கில், இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்ததை அடுத்து,பிரதமர் மோடி அனைத்துக்கட்சிக் கூட்டத்தை நடத்தினார். இதில், சீனா நமது எல்லைக்குள் ஊடுருவவில்லை எனவும், நமது நிலைகளைக் கைப்பற்றவில்லை என்றும் பிரதமர் குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் கல்வான் சர்ச்சை தொடர்பாக அறிக்கை விடுத்துள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்,பிரதமர் தான் பேசும் ஒவ்வொரு வார்த்தையின் தாக்கத்தையும் நினைவில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

ஏப்ரல் மாதத்தில் இருந்தே நமது எல்லைகளை சீனா அத்துமீறி ஆக்கிரமிக்க முயல்வதாக குறிப்பிட்டுள்ள மன்மோகன் சிங், இதனை நாம் அனுமதிக்கவே முடியாது எனவும் கூறியுள்ளார்.

பிரதமரின் வார்த்தைகள் சீன தரப்பின் நியாயத்திற்கு வலுசேர்க்கும்படி அமைந்துவிடக் கூடாது எனவும், இந்த விவகாரத்தில் தவறான தகவல்களை வழங்குவது ராஜதந்திரமாகாது எனவும் அறிவுறுத்தியுள்ளார்.மேலும் 20 ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்காவிடில் அது வரலாற்று துரோகம் ஆகிவிடும் என்று மன்மோகன் சிங் சாடியிருக்கிறார்.

You may have missed