இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் சிந்து..!

ஜெனிவா: தற்போது சுவிட்சர்லாந்தில் நடந்துவரும் உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டன் போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்து நம்பிக்கை அளிக்கும் விதமாக ஆடிவருகிறார்.

இப்போட்டியில் தங்கம் வெல்வதையே இலக்காக வைத்து கடந்த சில மாதங்களாகவே செயல்பட்டு வருகிறார் சிந்து. இதற்காக அவர் தாய்லாந்து ஓபன் போட்டியில் பங்கேற்கவில்லை. தனது செல்ஃபோன் பயன்பாட்டையும் அதிகளவில் குறைத்துக்கொண்டார்.

தனக்கான பயிற்சி நேரத்தை அதிகரித்துக்கொண்டார். ஏ‍ெனெனில், கடந்த 2 ஆண்டுகளாக பங்கேற்கும் போட்டிகளில் இறுதிக்கு தகுதிபெற்றும்கூட, சிந்துவுக்கு தங்கம் கைக்கூடாமல் போய்விடுகிறது. எனவே, இந்தமுறை எப்படியும் தவறவிட்டுவிடக்கூடாது என்ற வெறியுடன் செயல்பட்டு வருகிறார்.

இவர், சுவிட்சர்லாந்து உலக சாம்பியன்ஷிப் போட்டியின் 2வது சுற்றில் சீனாவின் பாய் யூ போவை தோற்கடித்து 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அதேநேரத்தில் இரட்டையர் பிரிவில் இந்திய இணையான மேகனா ஜக்கம்புடி மற்றும் புர்விஷா இணை, சீன இணையிடம் தோல்வியடைந்துவிட்டது.

எனவே, சிந்து மட்டுமே இப்போட்டித் தொடரில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார்!