சின்மயி சரவெடி: பிராமணர் சங்க தலைவர் நாராயணன் மீது பாலியல் குற்றச்சாட்டு

பிராமணர் சங்க தலைவர் நாராயணன் மீது பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்திருக்கிறார்.

ஆண்களால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் பலர், ”மீடூ #MeToo” என்ற ஹேஷ்டேக் மூலம் ட்விட்டரில் தங்களுக்கு நடந்த அத்துமீறல்களை எழுதி வருகிறார்கள்.

பிரபல பாடகி சின்மயி வைரமுத்து மீது பாலியல் புகார் கூறினார். இதையடுத்து பெண்கள் பலர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து தனக்கு தகவல்களை அனுப்பி வருவதாகவும் அவற்றை வெளியிடப்போவதாகவும் சின்மயி அறிவித்தார்.

இதையடுத்து  நடிகர் ராதாரவி, தொலைக்காட்சி பிரபலம் ரமேஷ்பிரபா,  பிரபல கர்நாடக இசை வல்லுநர்களான பி.எம்.சுந்தரம், பப்பு வேணுகோபால் ராவ், சுனில் கோத்தாரி, லோகநாத சர்மா, டி.என்.சேஷகோபாலன், சசிகிரண், ரவிகிரண் ஆகியோர் மீது பாலியல் புகார்கள் தெரிவிக்கும் பல பெண்களின் பதிவுகளை சின்மயி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

இந்த வரிசையில் தற்போது பிராமணர் சங்கம் (தாம்ப்ராஸ்) சங்க தலைவர் நாராயணன் மீது பாலியல் புகார் வெளியாகி உள்ளது.

ஒரு பெண்மணி, “என் உறவினர் பெண் ஒருவர், அலுவல் ரீதியாக பிராமணர் சங்க தலைவர் நாராயணனை சந்தித்தார். இந்த சந்திப்பு வெளியூரில் நடந்தது.   குறிப்பிட்ட பணியைக் கூறிய நாராயமணன், இதற்கான தொகையை சென்னையில் உள்ள தனது அலுவலகத்துக்கு வந்து வாங்கிச்செல்லும்படி கூறியிருக்கிறார்.

நாராயணன் அலுவலகத்துக்கு அருகில்தான் அந்த பெண்ணின் வீடு உள்ளது. ஆகவே தனியாக அங்கு சென்றிருக்கிறார். அவரிடம் நாராயணன் ஆபாசமாக பேசி தவறாக நடக்க முற்பட்டிருக்கிறார். அந்தப் பெண் தப்பி வந்துவிட்டார்” என்று  அந்தப் பெண்மணி கூறியிருக்கிறார்.