சீன நிறுவனமான, சினோவாக் பயோடெக் 2020 ஜனவரியில் சீனாவின் முன்னணி கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து கொரோனாவிற்கு ஒரு தடுப்பு மருந்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுப்பட்டது.

பெய்ஜிங்: சீன தடுப்பு மருந்து உற்பத்தி நிறுவனமான சினோவாக் பயோடெக் அதன் COVID-19 தடுப்பு மருந்தின் கட்டம் I மற்றும் II மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகளை அறிவித்துள்ளது. இதன்படி, அனைத்து முடிவுகளும், சரியாக வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் தடுப்பு மருந்து, கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளின் நோயெதிர்ப்பு சக்தியை தூண்டுவதாகவும் கூறியுள்ளது. கட்டம் I / II மருத்துவ சோதனைகள் தோராயமான தேர்வுகள், இரட்டை எண்ணிகையிலான மாதிரிகள் மற்றும் மருந்தளிக்கப்படாத/ மருந்து போன்ற போலி அளிக்கப்பட்ட கட்டுபாட்டு மற்றும் ஒப்பீட்டு குழுவைக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தது.  இந்த ஆய்வில், மொத்தத்தில், 18 முதல் 59 வயது வரையிலான 743 ஆரோக்கியமான தன்னார்வலர்கள் பங்கு பெற்றனர். அவர்களில், 143 தன்னார்வலர்கள் முதலாம் கட்டத்திலும், 600 தன்னார்வலர்கள் இரண்டாம் கட்டத்திலும் உள்ளனர் என்று பெய்ஜிங்கை மையமாகக் கொண்ட இந்த நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தடுப்பு மருந்து, இரண்டு வார இடைவெளியில் இரண்டு ஊசி மருந்துகளாக அளிக்கப்பட்டு 14 நாட்களுக்குப் பிறகு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. “90 சதவீதத்திற்கும் அதிகமான” நபர்களில் வைரஸை செயலிழக்கச் செய்யும்  ஆன்டிபாடிகள் உற்பத்தி தூண்டப்பட்டு, இரத்தத்தில் அதன் அளவு அதிகரித்து காணப்பட்டது. கடுமையான பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை. சீனாவின் தேசிய மருத்துவ தயாரிப்புகள் நிர்வாகத்திற்கு (என்.எம்.பி.ஏ) கட்டம் II-இன் மருத்துவ ஆய்வு அறிக்கை மற்றும் மூன்றாம் கட்ட மருத்துவ ஆய்வு நெறிமுறையை விரைவில் சமர்ப்பிக்கவும், சீனாவுக்கு வெளியே மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளைத் தொடங்கவும் நிறுவனம் தற்போது ஏற்பாடுகளை செய்து வருகிறது.

மூன்றாம் கட்ட மருத்துவ ஆய்வைத் தயாரிக்கவும் நடத்தவும் சினோவாக் பிரேசிலில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் புட்டன்டனுடன் இணையவுள்ளது. இவர்களின் அனைத்து ஆய்வு முடிவுகையும், பொதுவாக, அறிவியல் ஆய்வு இதழ்களின் வழியாக வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.  சினோவாக்கின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான வீடோங் யின் கூறுகையில், “எங்கள் கட்டம் I / II ஆய்வு முடிவுகளின்படி, எங்களின் தடுப்பு மருந்து “கொரோனாவாக்”  பாதுகாப்பானது மற்றும் நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டக்கூடியது என்பதைக் காட்டுகிறது,” என்றார்.

“இந்த ஊக்கமளிக்கும் முடிவுகளுடன் எங்கள் கட்டம் I / II மருத்துவ ஆய்வுகளை முடிப்பது COVID-19 க்கு எதிரான போராட்டத்தில் நாம் அடைந்த மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்” என்று வீடோங் கூறினார். “COVID-19 இலிருந்து மக்களைப் பாதுகாக்க கிடைக்கக்கூடிய அளவுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஒரு உற்பத்தி வசதியைக் கட்டுவதில் நாங்கள் முதலீடு செய்துள்ளோம். எங்கள் மற்ற தடுப்பு மருந்துகளைப் போலவே, எங்கள் நோக்கத்தின் ஒரு பகுதியாக உலகளாவிய பயன்பாட்டிற்காக “கொரோனாவாக்”கை உருவாக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்,” என்றார்.

சினோவாக் COVID-19 க்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்கும் பணியை சீனாவின் முன்னணி கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து, முதன் முதலில் 2020, ஜனவரியில் தொடங்கியது. சீனாவில் COVID-19 க்கு எதிராக அதன் செயலிழக்கச் செய்யப்பட்ட வைரஸ் சார்ந்த அதன் தடுப்பி மருந்தின் கட்டம் I / II சோதனைகளை நடத்த ஏப்ரல் 13 அன்று சீனாவின் NMPA இலிருந்து இந்நிறுவனம் ஒப்புதல் பெற்றது. COVID-19 ஐ ஏற்படுத்தும் புதிய தனித்துவமிக்க கொரோனா வைரஸுக்கு எதிராக பாதுகாப்பு தடுப்பு மருந்துகளை உருவாக்க தற்போது இரண்டு டஜனுக்கும் அதிகமான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. மே மாதத்தில், கேம்பிரிட்ஜ், மாஸ்-அடிப்படையிலான பயோடெக் நிறுவனமான மாடர்னா, அதன் சோதனை COVID-19 தடுப்பு மருந்துக்கான நோயெதிர்ப்பு-செயல்பாட்டு  முடிவுகளை முன்கூட்டியே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா போராட்டத்தின் அடுத்த கட்டமாக, விரைவில் ஒரு சரியான செய்தியை இந்நிறுவனங்கள் அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கலாம்!

தமிழில்: லயா