சிறகெதற்கு ?

பா. தேவிமயில் குமார்

 

எங்களின் சிறகு
என்றோ வெட்டப்பட்டுவிட்டது
அடடா ! நான்
காற்றைப் போன்றவள்
சிறகெதற்கு ?

நவீன துச்சாதனன்களும்
நாகரிக நாயகர்களும்
ஏமாற்றியதை
எண்ணாதே ! நாம்
என்றுமே பீனிக்ஸ் பறவைகள் தான் !

நிறம் குறைவானவள் என்றும்
நிறைய வசதி இல்லையென்றும்
கல்யாண சந்தையில்
குரல்கள் கேட்டன,
மூடர்களே !
வான வில்லுக்கு இன்னுமோர்
வண்ணம் எதற்கு ?

அடுப்பங்கரையும், அஞ்சறைப்பெட்டியும்
எனக்கென ஒதுக்கிய சமூகமே !
அன்னலட்சுமிகள்
நாங்களென்பது நினைவிருக்கிறதா ?

பெண்களைக் கெட்ட வார்த்தையால்
பேசிடும் சமூகமே ! இனி
திருந்திடுங்கள் என எச்சரித்து
“திருவாய்” மொழிகிறோம் !

புண்ணிய நதிகளுக்கு
பஞ்சமில்லை ! இனி
புன்னகை நதிகளாய்
பாய்ந்திடுவோம்,
பயணப்படுவோம், புது வழியில் !

மழையாகவே இருந்தால் நம்
மதிப்பு தெரியாது,
தேவைப்பட்ட இடத்தில்
இடியாகவும், மின்னலாகவும்
இறங்கிடுவோம் ! இனி !

கடவுளென எங்களைத்
தொழுதுவிட்டு பின்
கற்பழிக்கும் கூட்டமே,
எச்சரிக்கிறோம் !
காளிதேவியின் வடிவமும்
நாங்களென்பதை !

தெருப்பக்கம் எட்டிப் பார்த்தால்,
கருப்பைகளுக்குப் பாதுகாப்பில்லை !
ஆனாலும்…..
விண்வெளிக்கு சென்று
வெற்றிக் கொடி நாட்டுகிறோம் !

உணவுப் பொருட்களுக்கு மட்டுமல்ல
நீங்கள் அணியும்
உள்ளாடை விளம்பரத்திற்கும்
பெண்கள் தேவை, ஆனால்
பெண்ணுரிமை பற்றி
பேச மாட்டீர்கள் !

எங்களுக்கான
சட்டங்கள் மட்டுமல்ல, இனி
உங்களுக்கான
சட்டங்களையும் நாங்களே
எழுதிடுவோம் ! அக்காலம்
வெகு தொலைவிலில்லை !