கேரளா: பாலியல் புகாரில் சிக்கிய பாதிரியார் பிராங்கோவிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட கன்னியாஸ்திரி பணி நீக்கம்

கேரள மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட மற்றொரு கன்னியாஸ்திரி பணி நீக்கம் செய்யப்பட்டார். போராட்டத்தில் ஈடுபட்ட கன்னியாஸ்திரியை மீண்டும் பணியில் சேர்க்க வயநாடு தேவாலயம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Lucy

கேரளாவில் பணிபுரிந்து வந்த கன்னியாஸ்திரி ஒருவர், பிராங்கோ முல்லக்கல் என்ற பாதிரியார் 13 முறை பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னியாஸ்திரியின் புகாரை ஏற்று பாதிரியாரை கைது செய்யவும் வலியுறுத்தப்பட்டது.

புகார் அளித்தும் பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து கன்னியாஸ்திரிகள் பலர் கேரள உயர்நீதிமன்றத்தில் போராட்டம் நடத்தினர். இது குறித்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கன்னியாஸ்திரி போப் ஆண்டவருக்கு கடிதம் ஒன்றையும் எழுதினார். இதையடுத்து 3 நாள் விசாரணைக்கு பிறகு நேற்று பிராங்கோ முல்லக்கல் கைது செய்யப்பட்டார்.

பிராங்கோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கன்னியாஸ்திரிகள் மேற்கொண்ட காலவரையற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது. போராட்டத்தில் கலந்து கொண்ட கன்னியாஸ்திரிகளில் ஒருவரான லூசி கலப்புரா, வயநாடு மாவட்டத்தில் உள்ள சிரோ மலபார் கதோலிக்க தேவாலயத்தில் பணிபுரிந்து வருகிறார். போராட்டம் முடிந்து இன்று வயநாடுக்கு வந்த கன்னியாஸ்திரி லூசியை தேவாலய பணிகளில் ஈடுபட வேண்டாம் என சர்ச் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கன்னியாஸ்திரி லூசி, ” எந்த வித எழுத்துப்பூர்வமான அறிவிப்பும் அளிக்காமல், காரணங்களும் சொல்லாமல், தேவாலய பணிகளில் ஈடுபட கூடாது என வாய்மொழியாக மட்டுமே கூறி சர்ச் நிர்வாகம் தம்மை வெளியேற்றிவிட்டதாக “ குற்றம் சாட்டியுள்ளார்.

தேவாலய நிர்வாகத்தின் இத்தகைய செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.