நாயுடுவை தொடர்ந்து முக ஸ்டாலினை நாளை சந்திக்கிறார் சீதாராம் யெச்சூரி

சென்னை:

த்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வரும் நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ள நிலையில், நாளை  மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி  சந்தித்து பேசுகிறார்.

இந்த சந்திப்பு அண்ணா அறிவாலயத்தில் நாளை மாலை நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

மு.க.ஸ்டாலின் – சீதாராம் யெச்சூரி

2019ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை வீழ்த்த அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இதற்கான முயற்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் உள்பட பல எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்துள்ள நிலையில், கடந்த 9-ந்தேதி தி.மு.க. தலைவர் ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

இந்த நிலையில், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நாளை மு.க.ஸ்டாலினை  சந்தித்து பேசுகிறார். அண்ணா அறிவாலயத்தில் நாளை மாலை இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

இந்த சந்திப்பின்போது நடைபெற உள்ள  20 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக அவர்கள்  ஆலோசனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் 2 நாள் மாநிலக்குழு கூட்டம் சென்னையில் நாளை தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க  சீதாராம் யெச்சூரி சென்னை வருவது குறிப்பிடத்தக்கது.