கடும் எதிர்ப்புகளுக்கிடையில் மார்க்சிஸ்ட் கட்சி பொதுச்செயலாளராக மீண்டும் யெச்சூரி தேர்வு

ஐதராபாத்:

மாா்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக சீதாராம் யெச்சூரி மீண்டும் தோ்வு செய்யப்பட்டுள்ளார். பிரகாஷ் காரத் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் மீண்டும் யெச்சூரி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 வது மாநாடு கடந்த 18ந்தேதி தொடங்கி  5 நாட்கள் ஐதராபாத்தில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இறுதி நாள் மாநாட்டின்போது கட்சி தொண்டர்களின் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.அதைத்தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த மாநாட்டில், கட்சியின்  புதிய பொதுச் செயலாளராக தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் தற்போதைய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி,  திரிபுரா முன்னாள் முதல்-மந்திரி மாணிக் சர்க்கார், ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் பிருந்தா கரத், செயலாளர் பி.பி.ராகவலு ஆகியோருடைய பெயர்களும் பரிசீலிக்கப்பட்டன.

அப்போது, யெச்சூரி காங்கிரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக பிரகாஷ் காரத் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து  காங்கிரசுடன் அரசியல் கூட்டணி வைக்காமல் மதச்சார்பற்ற சக்திகளுடன் இணைந்து போட்டியிடலாம் என்ற வரைவு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து கட்சியின் புதிய மத்திய குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 95 பேரும் சீதாராம் யெச்சூரியை 2-வது முறையாக தேர்வு செய்ய சம்மதம் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து சீத்தாராம் யெச்சூரி  2வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மாநாடு நிறைவடைந்ததும், செய்தியாளர்களிடம் பேசிய சீதாராம் யெச்சூரி , நாடாளுமன்ற தேர்தலின்போது மாநிலங்களின் கள நிலவரப்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி அமைக்கும் என்றும் என்று கூறினார்.