மாநில தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பித்துள்ள சட்டப் பஞ்சாயத்து இயக்க நிறுவனர்!

சென்னை: தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்திற்கான ஆணையர் பதவிக்கு, தகவல் அறியும் உரிமை என்ற புத்தகத்தை எழுதி பிரபலமடைந்த 42 வயதுடைய சிவ இளங்கோ விண்ணப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; தகவல் ஆணையர் பதவிக்கு தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று அறிவிப்பு செய்திருந்தது தமிழக அரசு.

மேலும், விண்ணப்பதாரர்கள், பொதுவாழ்க்கையில் அறியப்படுபவராகவும், சட்டம், அறிவியல் & தொழில்நுட்பம், சமூக சேவை, மேலாண்மை, இதழியல், மாஸ் மீடியா அல்லது நிர்வாகம் ஆகிய துறைகளில் பரந்த அறிவுள்ளவராக இருப்பது அவசியம் என்று அரசு விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சிவ இளங்கோ எழுதியப் புத்தகம் 1 லட்சம் பிரதிகள் விற்றதுடன், தகவல் அறியும் உரிமை தொடர்பாக 25000 பேருக்கு பயிற்சியும் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சட்டப் பஞ்சாயத்து இயக்கம் என்ற ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தையும் தொடங்கி நடத்திவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை காமராஜர் பல்கலையில் ஜர்னலிஸம் & மாஸ் கம்யூனிகேஷன் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்ற சிவ இளங்கோ, கடந்த 2005ம் ஆண்டு முதல், பல்வேறு மாநில மற்றும் மத்திய அரசு துறைகளிடம் 2000க்கும் மேற்பட்ட ஆர்டிஐ மனுக்களை தாக்கல் செய்து சாதனை படைத்துள்ளார். மேலும், மாநில மற்றும் மத்திய தகவல் ஆணையங்களில் 50க்கும் மேற்பட்ட வழக்குகளுக்காக ஆஜராகியுள்ளார். இதன்மூலம் தனக்கு இந்த சட்டம் குறித்து முழுமையான அறிவும் அனுபவமும் இருப்பதாக கூறுகிறார் சிவ இளங்கோ.

விண்ணப்பம் செய்துள்ள இளங்கோவின் செயலை வரவேற்றுள்ள பலர், அரசு இவரைப்போன்ற நபர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.