சிவாஜி பிறந்த நாள் – திரையுலகத்துக்கு விடுமுறை நாள்: விஷால் அறிவிப்பு
சென்னை:
சிவாஜி பிறந்தநாள் அன்று திரையுலகத்துக்கு விடுமுறை நாள் என்று நடிகர் சங்க தலைவர் விஷால் அறிவித்து உள்ளார்.
இந்த ஆண்டு முதல் நடிகர் சிவாஜியின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் அறிவித்தார். இதற்கு சிவாஜி குடும்பத்தினர் உள்பட திரைப்பட உலகத்தை சேர்ந்த பல்வேறு சங்கங்களும் வரவேற்பு தெரிவித்திருந்தன.
இந்த நிலையில் சிவாஜி பிறந்தநாளான அக்டோபர் 1ந்தேதி தமிழக திரையுலகுக்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட இருப்பதாக நடிகர் சங்க தலைவர் விஷால்தெரிவித்து உள்ளார்.
தற்போது சண்டக்கோழி-2 படப்பிடிப்பில் திண்டுக்கல் அருகே மும்முரமாக இருந்து வரும் விஷால், அங்கு செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழ் திரையுலகினரும் சிவாஜி பிறந்தநாளை விடுமுறை நாளாக அறிவிக்க உள்ளதாகவும், பல கோடி ரூபாய் செலவு செய்து எடுக்கப்படும் ஒரு திரைப்படத்தை திருட்டு விடியோவாக வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், 2019-ம் ஆண்டு நடிகர் சங்கத்துக்கான கட்டட திறப்பு விழா முடிந்தவுடன், எனது திருமணம் நடைபெறும் என்ற விஷால், தனது 25-வது படமாக சண்டைக்கோழி-2 வெளி வரும் என்பதையும் தெரிவித்து உள்ளார்.